Wednesday, May 9, 2007

திருவாதவூர், திருமோகூர்

ம. ம. கோவில்கள் - 5 (நிறைவு பகுதி)

அழகர் கோவிலில் இருந்து கிளம்பி நாங்க போன அடுத்த கோவில் திருவாதவூர் கோவில். இந்த ஊரைப் பற்றி நீங்க கேள்விப்பட்டதுண்டா?

இது நம்ம மாணிக்கவாசகர் பிறந்த ஊர். அவருக்கு வாதவூரர்-ன்னு கூட ஒரு பேர் உண்டு. அவரு பிறந்து வளர்ந்ததெல்லாம் இந்த ஊரில்தான். பின்னர் அவர் மதுரை மன்னனிடம் அமைச்சராக இருந்தார். குதிரை வாங்க போனபோது, அந்த பணத்தையெல்லாம் திருப்பெருந்துறைக் கோவிலுக்கு செலவழித்தார். அரசர் கேட்டபோது குதிரை வாங்கியதாகச் சொன்னார், அவருக்காக இறைவன் நரிகளைப் பரியாக்கிய கதை நம்ம எல்லாருக்கும் தெரியும். திருவாசகத்தை அருளியதும் அவரே.

இன்னிக்கு திருவாசகமுன்னா எல்லாருக்கும் மாணிக்கவாசகரை விட இளையராஜா தான் ஞாபகத்துக்கு வராரு. அவரு கூட திருவாசகம் இசை வெளியிடுறதுக்கு முன்னாடி இந்த ஊர் கோவிலுக்கு வந்துட்டு போனாராம்.

இந்த ஊருக்கு வாதவூர்-ன்னு பேரு வரக்காரணம் நம்ம சனீஸ்வர பகவான். அவருக்கு ஒரு முறை வாத நோய் வந்ததாம். அப்போ அவர் இந்த ஊருக்கு வந்து இங்கிருக்கும் சிவபெருமானை பூஜை செய்து வழிபட்டாராம். உடனே அவருக்கு அந்த நோய் நீங்கியதாம். இப்பவும் கூட மக்கள் இந்த மாதிரி பிரச்சனைகளுக்காக இங்க வந்து போறாங்களாம். அதுமட்டுமில்லை இந்த ஊருக்கு வேதபுரின்னு அந்த காலத்தில ஒரு பேரு இருந்திருக்கு. வேத விற்பன்னர்கள் இங்கே அடிக்கடி கூடி விவாதங்கள் நடத்துவாங்களாம். அந்த வேதபுரி மருவி வாதபுரின்னு ஆகியிருக்கலாம், அதுவும் மருவி வாதவூருன்னு ஆகியிருக்கலாமுன்னு சொல்லுறாங்க.கோவில் பழமையான கோவில்...நேரா சிவன் சன்னதிக்கு போனோம். நாங்க போன வேளை கரண்ட் இல்லை. சன்னதி ரொம்ப இருளடைஞ்சு இருந்தது. சிவன் விளக்கு வெளிச்சத்தில் பிரமாதமா இருந்தார். அவர் பேரு வேதபுரீஸ்வரர். அங்கிருந்து வெளியே அம்மன் சன்னதிக்கு போனோம். அம்மனை தரிசித்து விட்டு வரும்போது கரண்ட் வந்துருச்சு. அதுனால மறுபடியும் போய் வேதபுரீஸ்வரரை பார்த்து விட்டு வெளியே இருக்கும் சனீஸ்வரர் சன்னதிக்கு போனாம். அன்னிக்கு சனிக்கிழமை. அதுனால அவருக்கு சிறப்பு அலங்காரம் செஞ்சிருந்தாங்க. அவரையும் தரிசனம் பண்ணிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். நான் இந்த கோவில் படம் எதுவும் எடுக்கலை. இணையத்தில் கிடைச்ச சில படங்களை போட்டிருக்கேன்.


மாணிக்க வாசகர் பிறந்த இடத்தில் ஒரு சிறிய கோவில் கட்டியிருந்தாங்க. நாங்க போனபோது அது பூட்டி இருந்த்து. மாலை 6 மணிக்குதான் திறப்பாங்களாம். சரி அடுத்தமுறை பார்த்துக்கலாம்ன்னு அங்கிருந்து புறப்பட்டோம்.


மதுரை திரும்பும் வழியில் திருமோகூர் கோவிலுக்கு போனாம். நாங்க போனபோது தெப்ப திருவிழா நடக்க இருந்தது. அதுனால மக்கள் வெள்ளம் நிரம்பியிருந்தது.உள்ளே நுழையும் இடத்தில் உற்சவர் இருந்தார். அவர் பெயர் திருமோகூர் ஆப்தன். அவரை தரிசித்துவிட்டு மூலவரை பார்க்கப் போனோம். மூலவர் காளமேகப் பெருமாள், நின்ற கோலம். இது 108 திருப்பதிகளில் ஒன்று. திருமங்கை ஆழ்வார் மற்றும் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. தாயார் மோகனவல்லி.


தாயார் சன்னதிக்கு அருகில் சக்கரத்தாழ்வார், சக்கரத்தாழ்வாருக்கு 16 கைகள், அதில் 16 விதமான ஆயுதங்களைக் கொண்டு ஜம்முன்னு இருக்கார். திருமோகூர் சக்கரத்தாழ்வார் ரொம்ப பிரசித்தி பெற்றவர். அவர் இருக்கும் இடத்தில் செல்வம் குவியும் என்பது ஐதீகம். 200 ரூபாய்க்கு சுதர்சன ஹோமத்தில் வைத்து பூஜிக்கப் பட்ட யந்திரம் கிடைக்கிறது.


திருமோகூரில் இருந்து மதுரை வந்து அடுத்தநாள் கிளம்பி சென்னை வந்து சேர்ந்தோம்.

ஏதா எனக்கு தெரிந்த விதத்தில் நான் பார்த்த கோவில்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் கண்டிப்பாக இந்த கோவில்களுக்கு செல்லுங்கள், உங்கள் கருத்துக்களையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தொடர்ந்து படித்த அனைவருக்கும், ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

7 comments:

உண்மைத் தமிழன் said...

வெகுநாட்களாகவிட்டது பிரசன்னா.. திருமோகூர் காளமேகப்பெருமாளையும், திருவாதவூர் வேதபுரீஸ்வரரையும் தரிசனம் செய்து.. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள்.. கடைசியா எனது நண்பரின் திருமணத்திற்கு திருமோகூர் சென்றபோது பார்த்தது.. பழைய ஞாபகத்தைக் கிளறியிருக்கிறீர்கள். நன்றிகள்.. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்..

ப்ரசன்னா said...

நன்றி உண்மைத் தமிழன்..

Anonymous said...

நல்ல பதிவு, தகவல்களுக்கு நன்றி

sita said...

prasanna you are really good in writing in tamil. I felt like as if i had gone to those places. After reading your blog, i feel like visiting those temples..
very informative.
keep writing.

ப்ரசன்னா said...

thanks a lot sita for your regular visit and support.

ச.சங்கர் said...

நன்றாக எழுதியுள்ளீர்கள்...நீங்கள் சென்று வந்த அனைத்து கோவில்களுக்கும் நானும் சென்று வந்தேன் :)மே மாதம்6 முதல் 12 வரை :)அதே வரிசையில் :)
திரு மோகூரில்தான் மஹாவிஷ்ணு மோஹினி அவதாரம் எடுத்ததாக கூறுவர்.
அனைத்து கோவிகளிலும் புடைப்படம் எடுத்தேன் ..அதை எனது பதிவிலிட்டு விளக்கத்திற்கு உங்கள் பதிவு லிங்கை கொடுத்து விடவா ?

ப்ரசன்னா said...

நன்றி சங்கர்.நீங்களும் அனைத்து கோவில்களுக்கும் அதே வரிசையில் சென்று வந்தது ஆச்சரியமான ஒற்றுமை. :-)

//அனைத்து கோவிகளிலும் புடைப்படம் எடுத்தேன் ..அதை எனது பதிவிலிட்டு விளக்கத்திற்கு உங்கள் பதிவு லிங்கை கொடுத்து விடவா ?//

தாராளமாக... no problem....