Wednesday, April 25, 2007

அழகர் மலை அழகர்கள்


ம. ம. கோ 4ம் பகுதி

ஆமாங்க அழகர் மலை அடிவாரத்தில் கள்ளழகர் இருக்காரு. மலையில் நம்ம அழகர் முருகன் இருக்காரு. இந்த ரெண்டு அழகர்களும் இருப்பதாலதான் அந்த மலைக்கு அழகர்கள் மலைன்னு பேரு வெச்சிருக்கலாமோ?

முதலில் போனது கள்ளழகரைக் காண. ஆமாம், அழகர் மலை அடிவாரத்தில், இருக்கும் அழகர் கோவிலுக்கு போனோம்.

அழகர் கோவில் என்பதே அழகு தமிழ் என்றாலும், அதை விட இனிமையான இன்னோரு பேர். இந்த இடத்துக்கு இருக்காம். திருமாலிருஞ்சோலை. நல்லா இருக்குல்ல


கோவில் ரொம்ப அருமையான இடத்தில் இருக்கு. அழகர் மலை பச்சைப் பசேலுன்னு அழகாவே இருக்கு. அதன் அடிவாரத்தில் கோவில் இருக்கு.வண்டியை வெளியிலே நிறுத்திட்டு கோட்டை சுவர் வழியா கோவிலுக்கு போனோம். அப்போ மணி சுமார் காலை 11:30. உள்ளே நுழையும் கோட்டை வாசலில் இருந்த பிரமாண்டமான கருடரையும், அனுமனையும் பார்த்தேன். அந்த கோட்டை சுவரையும் சுற்றி இருக்கும் மலையழகையும் பார்த்து ரசிச்சிட்டே போலாமுன்னு நினைச்சேன். ஆனால் அந்த கல்தரையில் காலை வச்சதும் வெயிலால சரியான சூடு. ஒரே ஓட்டமா கோவில் முகப்பு மண்டபத்துக்கு ஓட வேண்டியதாப் போச்சு.

அந்த முகப்பு மண்டபம் முழுக்க மக்கள் இளைப்பாறிட்டு இருந்தாங்க.. பக்கத்திலேயே நம்ம முன்னோர்களும் நிறையவே இருந்தாங்க. சொல்லப்போனா, மக்களோட இரண்டறக் கலந்திருந்தாங்க. அதைத் தாண்டி உள்ளே போனால் ஒரே கும்மிருட்டா இருந்தது. கருங்கல் கட்டிடம், நாங்க வேற நல்ல வெயில்ல இருந்து உள்ள போறோமா, அதுனால கண்ணு தெளிவா தெரியவே கொஞ்ச நேரம் ஆச்சு. அந்த முதல் பிரகாரத்தில் நிறைய அழகான சிற்பங்கள் இருந்தது. ஆனா, வெளிச்சம் இல்லாததுனால எல்லாத்தையும் சரியா ரசிக்க முடியலை.

சரி மூலவரை பார்க்கலாமுன்னு படியேறி அடுத்த பிரகாரத்துக்கு போனா, அங்க உற்சவர் கம்பீரமா இருந்தார். மூலவருக்கு முன்னால பெரிய திரை கட்டி இருந்தாங்க.. என்னான்னு கேட்டா மூலவருக்கு தைல காப்பு சாத்தியிருக்காங்களாம். ஒருமாசத்துக்கு மூலவர் தரிசனம் கிடையாதாம். வருஷத்தில ரெண்டு தடவை இந்த மாதிரி தைல காப்பு சாத்தி திரை போடப்படுமாம். சரீ நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு நினைச்சுகிட்டு உற்சவரை தரிசனம் பண்ணிகிட்டோம். மூலவர் பேரு சொல்லலையே, அவர் சுந்தரராஜப் பெருமாள். அவருக்கு இன்னோரு பேரும் இருக்கு. பரமஸ்வாமி. ஆச்சரியமாயிருக்கில்ல? சாதாரணமா, பரமன், பரமஸ்வாமின்னா, சிவனைத்தான் குறிக்கும். இங்க பெருமாளுக்கு அந்தப் பேரு. அரியும் சிவனும் ஒண்ணுன்னு நினைச்சிட்டே வெளியிலே வந்தோம். அங்க ஒரு விநாயகர் சிலை இருந்தது. பெருமாள் கோவிலில் விநாயகர் சிலையை பல இடங்களில் பார்த்திருக்கோம். ஆனா புதுசா பார்த்தது, விநாயகரோட பேருதான். என்ன பேரு தெரியுமா? தும்பிக்கையாழ்வார் :)

வெளிப்பிரகாரதிலே, தாயார் சன்னதி இருக்கு. தாயார் பேரு பூமிப் பிராட்டியார். பிரகாரம் சுத்தி வந்தா, ஆண்டாள் சன்னதி இருக்கு. ஆண்டாள் பெரியாழ்வாரோட இந்த கோவிலுக்கு வந்திருக்காங்களாம். கேட்டவுடனே ரொம்ப மலைப்பா இருந்தது. கோவிலோட தொன்மை புரிஞ்சது. அங்க யோக நரசிம்மருக்கு கூட ஒரு சன்னதி இருக்கு.

வெளியில பிரசாத ஸ்டால் இருக்கு. எல்லாருக்கும் ரொம்ப பசிச்சதுனால வடை வாங்கினேன். எல்லாருக்கும் குடுத்துட்டு நான் சாப்பிட எடுத்தபோது, என் வடையை யாரோ பிடுங்கிட்டாங்க.. ஒரு நிமிஷம் ஒண்ணும் புரியலை. அப்புறம் பார்த்தா, எல்லாருக்கும் குடுத்த நான், நம்ம முன்னோரை மறந்துட்டேன். அவங்கள்ல ஒருத்தர் தான் வடையை எடுத்துட்டு போனது. சரின்னு இன்னொரு வடை வாங்கினேன். அதை பேப்பரில் மறைச்சு எடுத்துட்டு வண்டியில ஏறினதுக்கப்புறம் சாப்பிட்டேன்.

அங்கிருந்து மேலே பழமுதிர்சோலைக்கு போனாம். மலையில் 3கி.மீ. பயணம். போகும்போது கல்லூரி காலத்தில் நண்பர்களோடு வந்ததை சொல்லிக்கொண்டே வந்தேன். நான் முதன்முதலில் மேடையேறி பாடிய இடம் பழமுதிர்சோலை. அதைப் பற்றி பேசிக் கொண்டே மேலே சென்றோம்.


முருகனின் ஆறு படைவீடுகளில் பழமுதிர்சோலை எனக்கு ரொம்ப பிடித்த கோவில். முன்னாடி ஒரு குட்டி மண்டபம் மட்டும் இருந்தது. இப்போ முகப்பில் ஒரு சிறிய கோபுரம் இருந்தது. மண்டபத்திலும் கூட தரை வேலைப்பாடுகள் செய்து பளிச்சுன்னு இருந்தது. அதுனால இன்னும் பிடிச்சுப்போச்சு. அமைதியான சூழலில் அமர்ந்திருந்த அழகனை தரிசனம் செய்துவிட்டு, நூபுர கங்கைக்கு போனாம்.

சுமார் 30 படிகள் ஏறவேண்டும். படிகளின் ரெண்டு பக்கமும் முன்னோர்கள் கூட்டம்தான். ஏறிப்போனால் மலைக்கு நடுவில் எப்போதும் வற்றாத நூபுர கங்கையைக் காணலாம். மலைகளின் மூலிகைகள் வழியாக வரும் நீர் என்பதால் இதுக்கு மருத்துவ குணமும் இருக்குதுன்னு சொல்றாங்க. அங்கேயே ராக்காயி அம்மன் சன்னதி இருக்கும். ரொம்ப அழகான அம்மன்.

பக்கத்திலேயே, அரசு மூலிகை வனம் இருந்தது. அங்க பலவிதமான வியாதிகளின் நிவாரணத்துக்கான மரங்கள் வளர்க்கப்படுதாம். அங்கே வேணுமின்னா நம்ம மரக் கன்றுகளை வாங்கிக்கலாம். எனக்கும் ஆசைதான் ஆனா, வீட்டில் இடம் இல்லையே...... அந்த அமைதியான சூழலை கொஞ்ச நேரம் ரசிச்சிட்டு அங்கிருந்து புறப்பட்டாச்சு.

தொடரும்.....

Tuesday, April 17, 2007

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் - ம.ம.கோவில்கள் -3

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் - அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டமுன்னு பாட்டு இருக்கு.


ஆமாம் நான் போனபோது நிஜமாகவே குமரனுக்கு கொண்டாட்டம் தான். அன்று திருத்தேர்.


கூட்டம் ஜாஸ்தியா இருக்குமேன்னு பயந்துகிட்டே போனோம். ஆனால் அப்புறம்தான் தெரிஞ்சது, தேர் காலையிலே. நான் போனது மாலை.
தேர் நல்லபடியா நிலை சேர்ந்திருந்தது. தேர் ரொம்ப் புதுசா இருந்தது. புது தேரான்னு தெரியலை. நீங்களே பார்த்து சொல்லுங்க. தேரில் ராஜா மாதிரி கம்பீரமா வீற்றிருந்த குமரனை காண கண்கோடி வேண்டும்.


கோவில் ஒரு குடைவரைக் கோவில். அந்த பெரிய குன்றை குடைஞ்சு கட்டீருக்காங்க..கோவில் பல நிலைகளா இருக்கு. கோவில் உள்ள நுழைஞ்சதும் வழக்கம் போல கடைகள் அப்புறம் விநாயகர் காளி சிலைகள் இருக்கு. அதைத் தாண்டி அடுத்த நிலைக்கு போனா.. அது பார்க்கிங் ஏரியா (parking area). ஆமாம் அங்க கல்லிலே செதுக்கப்பட்ட நந்தி, மயில், மூஞ்சூறு மூன்றும் ஒரே இடத்தில் இருக்கு.

இது வேறு எந்த முருகன் கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பம்சம். முருகனோட வாகனம் மயில் இருக்கு. விநாயகரோட வாகனம் மூஞ்சூறும், சிவனோட வாகனம் நந்தியும் இருக்கு. முருகனோட கல்யாணத்துக்கு இவங்க ரெண்டு பேரும் தங்களோட வாகனங்களில் வந்திருக்காங்க.. உள்ளே இவங்களுக்கு தனி சன்னதி இருக்கு. தங்களோட வாகனங்களை பார்க்கிங் ஏரியாவிலே நிறுத்தி வெச்சிருக்காங்க...

அதே இடதில் உக்கிரமூர்த்தி சிலை இருக்கு. தவறாம பாருங்க.. பேருதான் உக்கிரர், ஆனால் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. அதைப் பார்த்துகிட்டே ரொம்ப நேரம் நின்னுட்டிருந்தேன். என்ன அழகா குன்றிலேயே செதுக்கி இருக்காங்க... அழகு அழகு கொள்ளையழகு

அதைக் கடந்து அடுத்த நிலைக்கு போனா அர்த்த மண்டபம் இருக்கு. அங்கிருந்து சில படிகளைக் கடந்தால் சுவாமி சன்னதிகள் இருக்கு. இடப்புறம், சத்தியகிரீஸ்வரர் லிங்கோத்பவரா இருக்கார். பிரம்மாவுக்கும் சன்னதி இருக்கு ஆனா சரியா பார்க்க முடியலை, மறைஞ்சு இருக்கு. நேராக மூன்று சன்னதிகள் இருக்கு. கற்பக விநாயகர், அம்மன், முருகன். முருகனோட தேவயானை, நாரதர், அகத்தியர், சூரிய, சந்திரர்கள் இருக்காங்க. முருகன் பெரிய வேல் வெச்சிருக்கார். இங்க அபிஷேகமெல்லாம் வேலுக்கு தானாம். இந்த மூணு சன்னதிகளிலும் குன்றிலேயே தெய்வ உருவங்களை செதுக்கியிருக்காங்க. ஒன்னொன்ணும் அவ்வளவு அழகு.

சன்னதிகளை விட்டு வெளியே வந்தால் கீழே இறங்க தனி வழி. அந்த வழியே இறங்கும்போது மேலும் பல சன்னதிகள் இருக்கு. குறிப்பா சனீஸ்வரருக்கு தனி சன்னதி இருக்கு.

கோவிலை விட்டு வெளியே வந்தால் கடைவீதியில் நிறைய கடைகள் இருக்கு. குறிப்பா எதை எடுத்தாலும் 20 ரூபாய்ன்னு போட்டு நிறைய கடைகள் இருக்கு. நேரமில்லாததினால் அங்க எல்லாம் போகலை.

குன்றுக்கு மேல் ஒரு கோவில் இருக்காம். ஆனால் ஆறு மணிக்கு மேலே ஆனதுனால எங்களை மேலே ஏற அனுமதிக்கலை.

அடுத்த பகுதிகளில் கள்ளழகர், பழமுதிர்ச்சோலை, திருவாதவூர், திருமோகூர் கோவில்களைப் பற்றி சொல்லுறேன்.

தொடரும்.........


முதல் பகுதி இங்க இருக்கு. இரண்டாவது இங்க இருக்கு.

Thursday, April 12, 2007

மனம் மயக்கும் கோவில்கள் - 2

முதல் பகுதி படிச்சிட்டீங்களா?

மீனாட்சி அம்மன் கோவிலில் நான் எடுத்த முக்குறுணி விநாயகர் படம். செல்பேசியில் எடுத்ததால் கொஞ்சம் மங்கலாக இருக்கு. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.... பெரிய உருவம்.

இதுல சிறப்பம்சம் என்னனா, இது ஒரே கல்லினால் ஆனதாம். நீங்க நேரில் பார்த்தீங்கன்னா இதோட பிரம்மாண்டம் உங்களுக்கு புரியும். விநாயகர் சதுர்த்தியின் போது 1000 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்படுமாம். கேட்கவே பிரமிப்பா இருக்கு...
கோவிலில் தவறாமல் பார்க்க வேண்டிய இன்னோரு இடம் ஊர்த்துவ தாண்டவர் மற்றும் காளி சிலைகள். சொக்கநாதர் சன்னதிக்கு அருகில் இருக்கு. 4 பெரிய சிலைகள். முன்னாடி எல்லாம், வெண்ணை சாத்துறோம் பேர்வழின்னு மக்கள் வெண்ணை உருண்டைகளை சிலைகள் மேல் தூக்கி எறிவாங்க.. அதுனால 4 சிலைகளுமே வெண்ணை உருண்டைகளோட பயங்கரமா இருக்கும். இப்போ அதை தடை பண்ணிட்டாங்களாம். இப்போதான் அந்த சிலைகளோட முழு அழகும் தெரியுது. தடை விதிச்சவங்களுக்கு நன்றி.அங்கே இருக்கும் இன்னோரு குறிப்பிட வேண்டிய விஷயம் பிரசவ சிலை. சொக்கநாதர் சன்னதிக்கு போகும் வழியில் ஒரு ஆஞ்சநேயர் சிலை தூணிலேயே இருக்கும். அதுக்கு செந்தூரம் தடவி ஆரஞ்சு கலரில் பார்த்தவுடனே பளிச்சுன்னு தெரியும். அதுக்கு எதிரே இன்னோரு தூணில் ஒரு பெண் பிரசவிக்கும் சிலை இருக்கு. கர்ப்பிணி பெண்கள் அதை வழிபட்டு அதுக்கு எண்ணை தடவினால், சுகப்பிரசவம் ஆகும்னு ஒரு ஐதீகமாம்.


கோவிலை விட்டு வெளியே வரும் வழியில், ஆயிரங்கால் மண்டபம் அருகே கயிறுகள், படங்கள், டாலர்கள், மணிகள், மரச் சாமான்கள் இதுபோல பலவும் விற்கும் கடைகள் ஏராளம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட்டமாக அந்த கடைகளில் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். கடைக்காரர்களுக்கு நல்ல வருமானம்னு நினைக்கிறேன்.மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து திருப்பரங்குன்றம் போனோம். அதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

தொடரும்......

Tuesday, April 10, 2007

மனம் மயக்கும் கோவில்கள் - 1

நிச்சயமா இது துளசி டீச்சரோட நெஞ்சாங்கூட்டில் நிற்பதுக்கு போட்டி இல்லீங்க. போன வாரம் ஒரு 5 நாள் மதுரை, சிவகங்கையை சுற்றி இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் கோவில்களுக்கு போயிருந்தேன். அதைப் பற்றி சொல்லலாம்னு நினைக்கிறேன்

முதலில் சென்னையிலேருந்து திருச்சி வழியா மதுரைக்கு போகும் போது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு போனோம். நாங்க போனது வியாழன், அதுனால கோவிலில் கூட்டம் இல்லை. நல்ல தரிசனம்.

அங்க நடந்த ஒரு நிகழ்ச்சி. அந்த கோவிலின் சூப்பரண்டு அம்மா... சன்னதிக்கு முன்னாடி நின்னு கத்திகிட்டு, பக்தர்கள் எல்லாரையும் தரக்குறைவா பேசிட்டு இருந்தாங்க... எனக்கு இது பிடிக்கலை. அவங்களிடம் எடுத்துச் சொன்னபோது, என்னை வேலையை பார்த்துட்டு போகச் சொன்னாங்க... எனக்கு ரொம்ப கோவம் வந்தது. ஆனா, அந்த இடத்தில நான் அவங்களை கத்தினா, அவங்க செஞ்ச அதே தப்பை நானும் செய்வேன்னு நினைச்சு வாயை மூடிட்டு வந்துட்டேன். அந்த அம்மாவுக்கா இது எவ்வள்வு தப்புன்னு தெரிஞ்சா சரி....

பின் அங்கிருந்து கிளம்பி மதுரை வந்து சேர்ந்தோம். மறுநாள் வெள்ளிக்கிழமை காலை மதுரையில் இருந்து சிவகங்கை வழியாக நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோவிலுக்கு சென்றோம். நான் சிவகங்கைல படிக்கும்ப்போது ஒவ்வோரு வெள்ளியும் தவறாமல் இந்த கோவிலுக்கு போவேன். கிட்டத்தட்ட 7 வருஷம் கழிச்சு இப்போதான் போக நேரம் கிடைச்சது. அதுவும் முதல் முறையா இந்த கோவிலுக்கு தங்கமணி, குழந்தையோட போனது மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்தது. இத்தனை வருஷ இடைவெளியில் கோவில் எந்த விதத்திலும் மாறலை. போகும் வழியில் நான் வளர்ந்த வீடு, படிச்ச ஸ்கூல், காலேஜ் எல்லாம் போய் பார்த்தோம். அதுனால வழி முழுதும் ஒரே "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே" தான். சைக்கிள் மட்டும்தான் இல்லை.


உங்களுக்கு நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோவிலைப் பற்றி தெரியுமா? ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன். வரப்ப்ரசாதி. கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக மக்கள் அங்க வேண்டிக்குவாங்க... மாவிளக்கு ஏத்துவதும், கண் மலர் சாத்துவதும் எப்பவுமே நடக்கும். நீங்க இதுவரை பார்க்கலைன்னா கண்டிப்பாக ஒரு தடவை வந்து பாருங்க... இது சிவகங்கையிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நகரத்தார்கள் அதிகம் இருக்கும் ஊர். இங்க 80% மக்கள், கண்ணாத்தாள், கண்ணப்பன் னு பேர் கொண்டவங்களா இருப்பாங்க. flickr-ல் கிடைத்த கோபுரம் படங்களை இங்கே கொடுத்திருக்கிறேன். அம்மன் படம் flash animation-ல் இங்க இருக்கு.

பின்னர் அங்கிருந்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு போனோம். வெள்ளிக்கிழமை, அதோட விடுமுறை நாள் வேற, கூட்டத்துக்கு கேக்கணுமா...ஏதோ அங்கு இருக்கும் என் மாமா தயவில தூரத்தில இருந்து மீனாட்சி தரிசனம் கிடைச்சது. மீனாட்சிக்கு இருக்கும் கூட்டம் சொக்கநாதருக்கு இல்லை. அதுனால சொக்கநாதர் நல்ல தரிசனம். தங்கமணி இந்த கோவிலுக்கு வருவது இதுதான் முதல்முறை. அதுனால மறுபடியும் நாந்தான் கைடு. முக்குறுணி விநாயகர், பொற்றாமரைக்குளம், ஆயிரங்கால் மண்டபம் எல்லாம் விளக்கிச் சொன்னேன். கொஞ்ச நாள் முன்பு யானை இறந்து போயிட்டதா செய்தி பார்த்தேன். ஆனா நாங்க போனபோது அங்க ஒரு குட்டி யானை இருந்தது. அதுக்குள்ள வேற யானை வந்துடுச்சு.இதுக்கு அப்புறம் திருப்பரங்குன்றம், அழகர் கோவில், திருவாதவூர், திருமோகூர் கோவில்களுக்கு போனோம், இந்த பதிவு ரொம்ப நீளமா போயிட்டதுனால, அதை அடுத்த பகுதியில பார்ப்போம்