Thursday, May 31, 2007

பல்லவர் பூமி-2 ஐந்து ரதங்கள்

ஐந்து ரதங்கள்...இவை காலத்தால் கடற்கரைக் கோவில்களுக்கு முந்தியவை என்றாலும் நன்றாகப் பராமரிக்கப்பட்டு இருக்கின்றன.... இதில் இருக்கும் ஒவ்வொரு ரதமும், வித விதமான கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டிருக்கின்றன....படங்களைப் பாருங்கள்........

திரெளபதி ரதம்

திரெளபதி

அர்ஜுனன் ரதம்

பீமன் ரதம்

தர்மன் ரதம்
நகுல - சகாதேவ ரதம்
தகவல் பலகை
சிங்கம்
யானை
நந்தி... நானும் இதை தனியா படமெடுக்க ரொம்ப நேரம் காத்திருந்தேன். ஆனா மக்கள் விடலை. சரிபோகட்டுமுன்னு நந்தி முகத்தை மட்டும் எடுக்கலாம்னு முயற்சி பண்ணினேன். கரெக்டா இந்த வாண்டு குறுக்க வந்துட்டான். :(
மேலும் சில படங்கள்

தொடரும்.....

Wednesday, May 23, 2007

பல்லவர் பூமி - 1. மாமல்லபுரம் கடற்கரைக் கோவில்கள்

சமீபத்தில் மாமல்லபுரமும் காஞ்சிபுரமும் போக சந்தர்ப்பம் கிடைத்தது. நல்ல இனிய அனுபவம். போன முறை மாதிரியில்லாம நிறைய படங்களும் எடுத்தேன். அப்புறம் எதுக்கு சும்மா இருக்கணும் பதிவு போடவேண்டியதுதானே.....இதோ முதல் பகுதி.

முதல்ல நான் போனது கடற்கரைக் கோவிலுக்கு. பேருதான் கோவிலே தவிர இப்போ இது கோவில் இல்லை. ஒரு புராதன சின்னமாதான் இருக்கு.

கோவிலுக்கும், ஐந்து ரதங்களுக்கும் டிக்கெட் வாங்கணும். நம்ம ஆட்களுக்கு ரூ.10. வெளிநாட்டினருக்கு USD 5 or ரூ.250. எங்களோட ஒரு வெளிநாட்டு அண்ணாத்தேயும் வந்திருந்தாரு. சரின்னு அவருக்கு 5 டாலர் கொடுத்தா வாங்க மாட்டேன்னுட்டாங்க... 250 தான் தரணுமாம். முதல்ல எனக்கு புரியலை. அப்புறம் வீட்டுக்கு வந்து இணையத்தில் பார்தப்போதான் புரிஞ்சது. 5 டாலர் இன்னிக்கு தேதிக்கு ரூ.203 தான். என்னத்த சொல்ல..... சரி கோவிலைப் பார்ப்போம்.

மாமல்லபுரத்தில் வித விதமான சிற்பக்கலைகள் இருக்கு. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், மலையைக் குடைந்து செதுக்கப்பட்ட சிற்பங்கள். இப்படி பல, இந்த கடற்கரைக் கோவில்களில் உள்ளவை பெரும்பாலும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்

இங்க இருப்பது ரெண்டு கோவில்கள். படத்தில பார்த்தா ரெண்டு கோபுரங்கள் தெரியும். பெரிய கோபுரம் கடல் பார்த்து கிழக்கு நோக்கி இருக்கு.

இங்கே இருப்பது தாராலிங்கம் என்னும் லிங்கம். இது ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்பட்ட கடப்பா கல்லினால் ஆன பட்டைகளை வைத்து உருவாக்கப் பட்டது. இது 8 அடி உயரத்தில் இருந்ததாம். இப்போ மேல் பாகம் உடைந்து இருக்கு. ஏதோ ஒரு போரில் சிதைக்கப்பட்டதாக சொல்லுறாங்க... ..

இந்த கோவில் வரை கடல் இருந்திருக்கு. 1984-ல் இந்திய பிரதமர் உத்தரவின் படி ஒரு கல் சுவர் அமைத்து கடலை தடுத்து இருக்காங்க... படத்தில பாருங்க


இந்த கோவிலுக்கு பின்புறம் ஒரு பெருமாள் சன்னதி இருக்கு. பள்ளி கொண்ட பெருமாள். இவர் ஒரே கல்லினால் ஆனவர். இவருக்கு நேர் கோட்டில் வெளியே ஒரு சிங்கமும், பலியிடப்பட்ட மானின் சிற்பமும் இருக்கு. இவைகளும், பெருமாளும் ஒரே கல்லினால் ஆனதாம். அதாவது உள்ளே இருக்கும் பெருமாளை செதுக்கிய அதே கல், வெளியே வரை நீண்டிருக்கு, அதிலேயே சிங்கமும், மானும் இருக்கும் பீடம் செதுக்கப் பட்டு இருக்கு. கேக்கவே பிரமிப்பா இருக்கு. எவ்வளவு திட்டமிட்டு இதை செய்து இருக்கணும். அசாதாரணமான கற்பனை வளம். சிங்கமும், பலியிடப்பட்ட மானும் கீழே இருக்கு பாருங்க..


இதுக்கு பின்னால் சிறிய கோபுரத்தை உடைய சோமஸ்கந்தர் சன்னதி இருக்கு.அவரை கதவின் ஓட்டை வழியா படம் எடுத்தேன். குடும்பத்தோடு இருக்கார். இந்த சிறிய கோபுரம் கடப்பா கல்லினால் கட்டப்பட்டு இருக்கு. இதுக்கு முன்புறம் ஒரு மண்டபம் இருந்திருக்கு, இப்போ அதன் அடித்தளம் மட்டும் இருக்கு.
அது மட்டுமில்லாமல் ரெண்டு பளிங்கு தூண்களும் இருந்திருக்கு. இப்போ வெறும் அடிப்பகுதி மட்டும் தான் இருக்கு. படத்தைப் பாருங்க...

கோவிலைச் சுற்றி பெரிய மதில் சுவர் இருந்திருக்க வேண்டும், அதன் மேல் நந்திகள் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். இப்போ சில சிதைந்த நந்திகளை மட்டும் வெச்சிருக்காங்க...
கோவிலுக்கு வெளியே அகழ்வாராய்சி செய்யும்போது, இந்த இடத்தை கண்டு பிடிச்சிருக்காங்க.

இது ஆதிவராகர் சிலை. பன்றி முகம், யானை உடல், காளையின் கால்களைக் கொண்டது. பக்கத்திலேயே ஒரு தூணும், ஊற்றும் இருக்கு. இந்த ஊற்று தண்ணீர் சுவையாக இருக்குமாம்.

பல்லவர்காலத்தில இருந்த சிற்பக்கலை வளர்ச்சிக்கு இந்த கோவில் நல்ல சான்று. கடலுக்கு பக்கத்தில் இருப்பதால கொஞ்சம் சிதைஞ்சிருந்தாலும், நல்ல பாதுக்காப்பா பராமரிக்கிறாங்கன்னுதான் சொல்லணும். இதுமாதிரி 7 கோவில்கள் இருந்ததாகவும் இது 6வது கோவில். 5வது கோவிலின் அடித்தளம் சுனாமியினால் வெளியே வந்திருப்பதாகவும் சொன்னாங்க....

கோவில் வரலாறு சொல்லும் தகவல் பலகை


மேலும் சில படங்கள்


தொடரும்

Wednesday, May 9, 2007

திருவாதவூர், திருமோகூர்

ம. ம. கோவில்கள் - 5 (நிறைவு பகுதி)

அழகர் கோவிலில் இருந்து கிளம்பி நாங்க போன அடுத்த கோவில் திருவாதவூர் கோவில். இந்த ஊரைப் பற்றி நீங்க கேள்விப்பட்டதுண்டா?

இது நம்ம மாணிக்கவாசகர் பிறந்த ஊர். அவருக்கு வாதவூரர்-ன்னு கூட ஒரு பேர் உண்டு. அவரு பிறந்து வளர்ந்ததெல்லாம் இந்த ஊரில்தான். பின்னர் அவர் மதுரை மன்னனிடம் அமைச்சராக இருந்தார். குதிரை வாங்க போனபோது, அந்த பணத்தையெல்லாம் திருப்பெருந்துறைக் கோவிலுக்கு செலவழித்தார். அரசர் கேட்டபோது குதிரை வாங்கியதாகச் சொன்னார், அவருக்காக இறைவன் நரிகளைப் பரியாக்கிய கதை நம்ம எல்லாருக்கும் தெரியும். திருவாசகத்தை அருளியதும் அவரே.

இன்னிக்கு திருவாசகமுன்னா எல்லாருக்கும் மாணிக்கவாசகரை விட இளையராஜா தான் ஞாபகத்துக்கு வராரு. அவரு கூட திருவாசகம் இசை வெளியிடுறதுக்கு முன்னாடி இந்த ஊர் கோவிலுக்கு வந்துட்டு போனாராம்.

இந்த ஊருக்கு வாதவூர்-ன்னு பேரு வரக்காரணம் நம்ம சனீஸ்வர பகவான். அவருக்கு ஒரு முறை வாத நோய் வந்ததாம். அப்போ அவர் இந்த ஊருக்கு வந்து இங்கிருக்கும் சிவபெருமானை பூஜை செய்து வழிபட்டாராம். உடனே அவருக்கு அந்த நோய் நீங்கியதாம். இப்பவும் கூட மக்கள் இந்த மாதிரி பிரச்சனைகளுக்காக இங்க வந்து போறாங்களாம். அதுமட்டுமில்லை இந்த ஊருக்கு வேதபுரின்னு அந்த காலத்தில ஒரு பேரு இருந்திருக்கு. வேத விற்பன்னர்கள் இங்கே அடிக்கடி கூடி விவாதங்கள் நடத்துவாங்களாம். அந்த வேதபுரி மருவி வாதபுரின்னு ஆகியிருக்கலாம், அதுவும் மருவி வாதவூருன்னு ஆகியிருக்கலாமுன்னு சொல்லுறாங்க.கோவில் பழமையான கோவில்...நேரா சிவன் சன்னதிக்கு போனோம். நாங்க போன வேளை கரண்ட் இல்லை. சன்னதி ரொம்ப இருளடைஞ்சு இருந்தது. சிவன் விளக்கு வெளிச்சத்தில் பிரமாதமா இருந்தார். அவர் பேரு வேதபுரீஸ்வரர். அங்கிருந்து வெளியே அம்மன் சன்னதிக்கு போனோம். அம்மனை தரிசித்து விட்டு வரும்போது கரண்ட் வந்துருச்சு. அதுனால மறுபடியும் போய் வேதபுரீஸ்வரரை பார்த்து விட்டு வெளியே இருக்கும் சனீஸ்வரர் சன்னதிக்கு போனாம். அன்னிக்கு சனிக்கிழமை. அதுனால அவருக்கு சிறப்பு அலங்காரம் செஞ்சிருந்தாங்க. அவரையும் தரிசனம் பண்ணிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். நான் இந்த கோவில் படம் எதுவும் எடுக்கலை. இணையத்தில் கிடைச்ச சில படங்களை போட்டிருக்கேன்.


மாணிக்க வாசகர் பிறந்த இடத்தில் ஒரு சிறிய கோவில் கட்டியிருந்தாங்க. நாங்க போனபோது அது பூட்டி இருந்த்து. மாலை 6 மணிக்குதான் திறப்பாங்களாம். சரி அடுத்தமுறை பார்த்துக்கலாம்ன்னு அங்கிருந்து புறப்பட்டோம்.


மதுரை திரும்பும் வழியில் திருமோகூர் கோவிலுக்கு போனாம். நாங்க போனபோது தெப்ப திருவிழா நடக்க இருந்தது. அதுனால மக்கள் வெள்ளம் நிரம்பியிருந்தது.உள்ளே நுழையும் இடத்தில் உற்சவர் இருந்தார். அவர் பெயர் திருமோகூர் ஆப்தன். அவரை தரிசித்துவிட்டு மூலவரை பார்க்கப் போனோம். மூலவர் காளமேகப் பெருமாள், நின்ற கோலம். இது 108 திருப்பதிகளில் ஒன்று. திருமங்கை ஆழ்வார் மற்றும் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. தாயார் மோகனவல்லி.


தாயார் சன்னதிக்கு அருகில் சக்கரத்தாழ்வார், சக்கரத்தாழ்வாருக்கு 16 கைகள், அதில் 16 விதமான ஆயுதங்களைக் கொண்டு ஜம்முன்னு இருக்கார். திருமோகூர் சக்கரத்தாழ்வார் ரொம்ப பிரசித்தி பெற்றவர். அவர் இருக்கும் இடத்தில் செல்வம் குவியும் என்பது ஐதீகம். 200 ரூபாய்க்கு சுதர்சன ஹோமத்தில் வைத்து பூஜிக்கப் பட்ட யந்திரம் கிடைக்கிறது.


திருமோகூரில் இருந்து மதுரை வந்து அடுத்தநாள் கிளம்பி சென்னை வந்து சேர்ந்தோம்.

ஏதா எனக்கு தெரிந்த விதத்தில் நான் பார்த்த கோவில்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் கண்டிப்பாக இந்த கோவில்களுக்கு செல்லுங்கள், உங்கள் கருத்துக்களையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தொடர்ந்து படித்த அனைவருக்கும், ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.