Wednesday, April 25, 2007

அழகர் மலை அழகர்கள்


ம. ம. கோ 4ம் பகுதி

ஆமாங்க அழகர் மலை அடிவாரத்தில் கள்ளழகர் இருக்காரு. மலையில் நம்ம அழகர் முருகன் இருக்காரு. இந்த ரெண்டு அழகர்களும் இருப்பதாலதான் அந்த மலைக்கு அழகர்கள் மலைன்னு பேரு வெச்சிருக்கலாமோ?

முதலில் போனது கள்ளழகரைக் காண. ஆமாம், அழகர் மலை அடிவாரத்தில், இருக்கும் அழகர் கோவிலுக்கு போனோம்.

அழகர் கோவில் என்பதே அழகு தமிழ் என்றாலும், அதை விட இனிமையான இன்னோரு பேர். இந்த இடத்துக்கு இருக்காம். திருமாலிருஞ்சோலை. நல்லா இருக்குல்ல


கோவில் ரொம்ப அருமையான இடத்தில் இருக்கு. அழகர் மலை பச்சைப் பசேலுன்னு அழகாவே இருக்கு. அதன் அடிவாரத்தில் கோவில் இருக்கு.வண்டியை வெளியிலே நிறுத்திட்டு கோட்டை சுவர் வழியா கோவிலுக்கு போனோம். அப்போ மணி சுமார் காலை 11:30. உள்ளே நுழையும் கோட்டை வாசலில் இருந்த பிரமாண்டமான கருடரையும், அனுமனையும் பார்த்தேன். அந்த கோட்டை சுவரையும் சுற்றி இருக்கும் மலையழகையும் பார்த்து ரசிச்சிட்டே போலாமுன்னு நினைச்சேன். ஆனால் அந்த கல்தரையில் காலை வச்சதும் வெயிலால சரியான சூடு. ஒரே ஓட்டமா கோவில் முகப்பு மண்டபத்துக்கு ஓட வேண்டியதாப் போச்சு.

அந்த முகப்பு மண்டபம் முழுக்க மக்கள் இளைப்பாறிட்டு இருந்தாங்க.. பக்கத்திலேயே நம்ம முன்னோர்களும் நிறையவே இருந்தாங்க. சொல்லப்போனா, மக்களோட இரண்டறக் கலந்திருந்தாங்க. அதைத் தாண்டி உள்ளே போனால் ஒரே கும்மிருட்டா இருந்தது. கருங்கல் கட்டிடம், நாங்க வேற நல்ல வெயில்ல இருந்து உள்ள போறோமா, அதுனால கண்ணு தெளிவா தெரியவே கொஞ்ச நேரம் ஆச்சு. அந்த முதல் பிரகாரத்தில் நிறைய அழகான சிற்பங்கள் இருந்தது. ஆனா, வெளிச்சம் இல்லாததுனால எல்லாத்தையும் சரியா ரசிக்க முடியலை.

சரி மூலவரை பார்க்கலாமுன்னு படியேறி அடுத்த பிரகாரத்துக்கு போனா, அங்க உற்சவர் கம்பீரமா இருந்தார். மூலவருக்கு முன்னால பெரிய திரை கட்டி இருந்தாங்க.. என்னான்னு கேட்டா மூலவருக்கு தைல காப்பு சாத்தியிருக்காங்களாம். ஒருமாசத்துக்கு மூலவர் தரிசனம் கிடையாதாம். வருஷத்தில ரெண்டு தடவை இந்த மாதிரி தைல காப்பு சாத்தி திரை போடப்படுமாம். சரீ நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு நினைச்சுகிட்டு உற்சவரை தரிசனம் பண்ணிகிட்டோம். மூலவர் பேரு சொல்லலையே, அவர் சுந்தரராஜப் பெருமாள். அவருக்கு இன்னோரு பேரும் இருக்கு. பரமஸ்வாமி. ஆச்சரியமாயிருக்கில்ல? சாதாரணமா, பரமன், பரமஸ்வாமின்னா, சிவனைத்தான் குறிக்கும். இங்க பெருமாளுக்கு அந்தப் பேரு. அரியும் சிவனும் ஒண்ணுன்னு நினைச்சிட்டே வெளியிலே வந்தோம். அங்க ஒரு விநாயகர் சிலை இருந்தது. பெருமாள் கோவிலில் விநாயகர் சிலையை பல இடங்களில் பார்த்திருக்கோம். ஆனா புதுசா பார்த்தது, விநாயகரோட பேருதான். என்ன பேரு தெரியுமா? தும்பிக்கையாழ்வார் :)

வெளிப்பிரகாரதிலே, தாயார் சன்னதி இருக்கு. தாயார் பேரு பூமிப் பிராட்டியார். பிரகாரம் சுத்தி வந்தா, ஆண்டாள் சன்னதி இருக்கு. ஆண்டாள் பெரியாழ்வாரோட இந்த கோவிலுக்கு வந்திருக்காங்களாம். கேட்டவுடனே ரொம்ப மலைப்பா இருந்தது. கோவிலோட தொன்மை புரிஞ்சது. அங்க யோக நரசிம்மருக்கு கூட ஒரு சன்னதி இருக்கு.

வெளியில பிரசாத ஸ்டால் இருக்கு. எல்லாருக்கும் ரொம்ப பசிச்சதுனால வடை வாங்கினேன். எல்லாருக்கும் குடுத்துட்டு நான் சாப்பிட எடுத்தபோது, என் வடையை யாரோ பிடுங்கிட்டாங்க.. ஒரு நிமிஷம் ஒண்ணும் புரியலை. அப்புறம் பார்த்தா, எல்லாருக்கும் குடுத்த நான், நம்ம முன்னோரை மறந்துட்டேன். அவங்கள்ல ஒருத்தர் தான் வடையை எடுத்துட்டு போனது. சரின்னு இன்னொரு வடை வாங்கினேன். அதை பேப்பரில் மறைச்சு எடுத்துட்டு வண்டியில ஏறினதுக்கப்புறம் சாப்பிட்டேன்.

அங்கிருந்து மேலே பழமுதிர்சோலைக்கு போனாம். மலையில் 3கி.மீ. பயணம். போகும்போது கல்லூரி காலத்தில் நண்பர்களோடு வந்ததை சொல்லிக்கொண்டே வந்தேன். நான் முதன்முதலில் மேடையேறி பாடிய இடம் பழமுதிர்சோலை. அதைப் பற்றி பேசிக் கொண்டே மேலே சென்றோம்.


முருகனின் ஆறு படைவீடுகளில் பழமுதிர்சோலை எனக்கு ரொம்ப பிடித்த கோவில். முன்னாடி ஒரு குட்டி மண்டபம் மட்டும் இருந்தது. இப்போ முகப்பில் ஒரு சிறிய கோபுரம் இருந்தது. மண்டபத்திலும் கூட தரை வேலைப்பாடுகள் செய்து பளிச்சுன்னு இருந்தது. அதுனால இன்னும் பிடிச்சுப்போச்சு. அமைதியான சூழலில் அமர்ந்திருந்த அழகனை தரிசனம் செய்துவிட்டு, நூபுர கங்கைக்கு போனாம்.

சுமார் 30 படிகள் ஏறவேண்டும். படிகளின் ரெண்டு பக்கமும் முன்னோர்கள் கூட்டம்தான். ஏறிப்போனால் மலைக்கு நடுவில் எப்போதும் வற்றாத நூபுர கங்கையைக் காணலாம். மலைகளின் மூலிகைகள் வழியாக வரும் நீர் என்பதால் இதுக்கு மருத்துவ குணமும் இருக்குதுன்னு சொல்றாங்க. அங்கேயே ராக்காயி அம்மன் சன்னதி இருக்கும். ரொம்ப அழகான அம்மன்.

பக்கத்திலேயே, அரசு மூலிகை வனம் இருந்தது. அங்க பலவிதமான வியாதிகளின் நிவாரணத்துக்கான மரங்கள் வளர்க்கப்படுதாம். அங்கே வேணுமின்னா நம்ம மரக் கன்றுகளை வாங்கிக்கலாம். எனக்கும் ஆசைதான் ஆனா, வீட்டில் இடம் இல்லையே...... அந்த அமைதியான சூழலை கொஞ்ச நேரம் ரசிச்சிட்டு அங்கிருந்து புறப்பட்டாச்சு.

தொடரும்.....

10 comments:

ப்ரசன்னா said...

வழக்கம் போல நானே முதல் பின்னூட்டம்.

Your friend said...

Photos are nice

துளசி கோபால் said...

உங்களுக்கு நல்லா எழுத வந்துருச்சு ப்ரசன்னா.

வாழ்த்து(க்)கள்.

இந்த இடங்களைப் பத்தி முந்தி நான்கூட சில பதிவுகள் போட்டுருக்கேன்.

முன்னோர்களிலொருத்தருக்கு ஒரு கை இல்லை. அவரைப் பார்த்தீங்களா?
நூபுரகங்கை ஏரியாவில்தான் மூலிகைத்தோட்டத்தில் 'பொரி' தின்னுக்கிட்டுஇருப்பார்.

balar said...

நல்ல பதிவு..ஒரே ஒரு முறை சென்று உள்ளேன் இந்த கோவிலுக்கு நண்பர்களுடன்..கீழே இருந்து மேல் உள்ள் அந்த தீர்த்த தொட்டி வரை நண்பர்களுடன் நடந்த்து சென்றது இனிமையான அனுப்வம்...
எனக்கு தெரிந்து அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலை தான் அதிக பராமரிப்பு இன்றி உள்ளது..நாங்கள் சென்ற சமயம் ஒர் பூசாரி கூட இல்லை..:(

குரங்குகள் அதிகம் இந்த மலையில்..ஆனால் எங்களை பார்த்து நமக்கு போட்டியாக இவர்கள் வந்துவிட்டார்களே என்று அவைகல் பயந்த்து ஒடிவிட்டன..

ப்ரசன்னா said...

வரணும் டீச்சர். இன்னிக்கு காலையில வந்து பார்த்தா என்னோட கோவில்கள் பதிவு எல்லாம் படிச்சு பின்னூட்டம் போட்டிருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

//உங்களுக்கு நல்லா எழுத வந்துருச்சு ப்ரசன்னா.

வாழ்த்து(க்)கள்.//

எல்லாம் உங்களிடமிருந்து கத்துகிட்டதுதானே. நான் உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும். ரொம்ப நன்றி டீச்சர்

//முன்னோர்களிலொருத்தருக்கு ஒரு கை இல்லை. அவரைப் பார்த்தீங்களா?
நூபுரகங்கை ஏரியாவில்தான் மூலிகைத்தோட்டத்தில் 'பொரி' தின்னுக்கிட்டுஇருப்பார்.//

இல்லை. அவரைப் பார்க்கவில்லையே... நிறைய பேரை பார்த்து படமும் எடுத்து வச்சிருக்கேன், ஆனா கை இல்லாத யாரையுமே பார்க்கலை.

அடிக்கடி வாங்க டீச்சர்.

ப்ரசன்னா said...

//நல்ல பதிவு..ஒரே ஒரு முறை சென்று உள்ளேன் இந்த கோவிலுக்கு நண்பர்களுடன்..கீழே இருந்து மேல் உள்ள் அந்த தீர்த்த தொட்டி வரை நண்பர்களுடன் நடந்த்து சென்றது இனிமையான அனுப்வம்...//

நன்றி. பாலா. நானும் கல்லூரி நாட்களில் பல தடவை நடந்து சென்றிருக்கிறேன். உண்மையிலேயே அது இனிமையான அனுபவம்.

//எனக்கு தெரிந்து அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலை தான் அதிக பராமரிப்பு இன்றி உள்ளது..நாங்கள் சென்ற சமயம் ஒர் பூசாரி கூட இல்லை..:(//

இப்போது அப்படி இல்லை என்று நினைக்கிறேன். நல்ல வேலைப்பாடுகள் செய்து, ஆட்களும் இருக்கிறார்களே... நீங்க எப்போ போனீங்க?

குமரன் (Kumaran) said...

அட. எங்க அழகர் கோவிலைப் பத்தி நல்லா எழுதியிருக்கீங்க ப்ரசன்னா. நீங்க எழுதுனதைப் படிச்சா அழகர் மலைக்கே போயிட்டு வந்த மாதிரி இருக்கு. ரொம்ப நல்ல விதமா எழுதுறீங்க.

திருமாலிருஞ்சோலை அழகனை அடுத்த முறை சென்று பார்த்துவிடுங்கள். பரமசுவாமியும் அழகாக இருப்பார். உற்சவர் முழுக்க முழுக்கத் தங்கத்தால் ஆனவர். பொன்மேனி. அவர் தான் சித்திராபௌர்ணமியில் வைகையில் ஆத்துல இறங்கும் கள்ளழகர். பெரும் அழகர். பதினெட்டாம்படி கருப்பணசாமியைப் பாத்திருப்பீங்களே. இந்த உற்சவருக்குப் பாதுகாப்பு கொடுப்பவர் தான் பதினெட்டாம்படியான்.

பழமுதிர்ச்சோலை கோபுரம் கட்டுன பிறகு இன்னும் பார்க்கலை. கடந்த ரெண்டு முறை மதுரைக்குப் போன போது அழகரை மட்டும் பார்த்துவிட்டு வந்துட்டேன். இந்த முறை ஜூனில் போகும் போது மருகனையும் பார்க்க வேண்டும்.

ப்ரசன்னா said...

//அட. எங்க அழகர் கோவிலைப் பத்தி நல்லா எழுதியிருக்கீங்க ப்ரசன்னா. நீங்க எழுதுனதைப் படிச்சா அழகர் மலைக்கே போயிட்டு வந்த மாதிரி இருக்கு. ரொம்ப நல்ல விதமா எழுதுறீங்க.//

நன்றி குமரன். நானும் வளர்ந்தது சிவகங்கை, மதுரை பகுதிகளில்தான். :-))

//உற்சவர் முழுக்க முழுக்கத் தங்கத்தால் ஆனவர். பொன்மேனி. அவர் தான் சித்திராபௌர்ணமியில் வைகையில் ஆத்துல இறங்கும் கள்ளழகர். பெரும் அழகர். பதினெட்டாம்படி கருப்பணசாமியைப் பாத்திருப்பீங்களே. இந்த உற்சவருக்குப் பாதுகாப்பு கொடுப்பவர் தான் பதினெட்டாம்படியான்.//

ஆமாம் இந்த தகவல்கள் விட்டுப்போச்சு. உற்சவர் சுத்த தங்கத்தால் ஆனவராமே. அதுக்கு ஏதோ ஒரு பேரு சொன்னாங்க, மறந்து போச்சு.

//பழமுதிர்ச்சோலை கோபுரம் கட்டுன பிறகு இன்னும் பார்க்கலை. கடந்த ரெண்டு முறை மதுரைக்குப் போன போது அழகரை மட்டும் பார்த்துவிட்டு வந்துட்டேன். இந்த முறை ஜூனில் போகும் போது மருகனையும் பார்க்க வேண்டும்.//

கண்டிப்பா போங்க... பெரிய மாற்றம் இல்லைன்னாலும், முன்னைக்கு இப்போ நல்லா இருக்கு.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமரன். அடிக்கடி வாங்க.

ப்ரசன்னா said...

குமரன்,

//பழமுதிர்ச்சோலை கோபுரம் கட்டுன பிறகு இன்னும் பார்க்கலை//

படம் போட்டிருக்கேனே அதுதான் இப்போ இருக்கும் கோபுரம்.

Anonymous said...

Rather amusing message