Wednesday, August 27, 2008
கொடநாடு காட்சிமுனை....
ஆணி கொஞ்சம் அதிகமா போனதுனால அடுத்த பகுதி உடனே எழுதமுடியலை. அதுக்குள்ள கோடிக்கணக்கான தனிமடல் வந்திருச்சு. (சரி... சரி.....)
நீலகிரி எக்ஸ்பிரஸில் வந்த முதல் பகுதி இங்கே....
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வந்த இரண்டாம் பகுதி இங்கே
தொட்டபெட்டா ரோட்டுமேல இங்கே.... இது வரைக்கும் படிக்கலைன்னா உடனே படிச்சிடுங்க..
கொடநாடு, கோத்தகிரியிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் இருக்கு. போற வழி சுமாராதான் இருந்துச்சு. ஆனா வழியெங்கும் பச்சைப் பசேலுன்னு டீ எஸ்டேட்களும், தோட்டங்களும் இருந்தது. நாங்க போகும் போது நல்ல மேகமூட்டமா வேற இருந்துச்சா... பார்ககவே அமர்க்களமா இருந்துச்சு.. வண்டியை நிறுத்தி நிறுத்தி நல்லா பார்த்து ரசிச்சுகிட்டே போனோம். போகும் வழியில் இருந்த ஒரு அழகான கிராமம் கீழே.
கொடநாடு எல்லையிலேயே "அந்த" எஸ்டேட் இருக்கு. சும்மா சொல்லக் கூடாது நாங்க பார்த்ததிலேயே அருமையா பராமரிச்சு பார்க்கவே அழகா இருந்தது அந்த எஸ்டேட் தான். மொத்தம் 9 கேட். கேட் 4 கிட்டதான் பங்களா இருக்கு. நாங்க போன சமயத்தில "அவங்க" அங்கதான் இருந்தாங்க. அதுனால போலீஸ் பாதுகாப்பு இருந்துச்சு. பங்களா தாண்டி சுமார் 2 கி.மீ தொலைவிலே இந்த காட்சி முனை இருக்கு.
நாங்க போனபோது எங்களைத் தவிர இன்னும் இரண்டு பேர் மட்டும்தான் அங்க இருந்தாங்க.. இப்படி ஒரு சுற்றுலா தலத்தில் ஆளே இல்லாமல் இருந்ததுனால இங்க எதுவுமே இருக்காது போல இருக்கே. தேவையில்லமா வந்துட்டோமோன்னு நினைச்சேன். காட்சிமுனை கோபுரத்தின் மேலே ஏறிப்பார்த்தபோதுதான நான் நினைச்சது எவ்வளவு தப்புன்னு தெரிஞ்சது.
என்ன அருமையான காட்சி. என் வாழ்நாளில் நான் பார்த்த மிகச் சிறந்த இடங்களில் இதுவும் ஒண்ணு. அதை விவரிக்க வார்த்தைகள் போதாதுங்க. சுத்தி வர மலைகள். நடுவில் பசுமை பள்ளத்தாக்கு. அந்த அழகே அழகு. அந்த பள்ளத்தாக்கின் முடிவில் ஒரு கிராமம். (தெங்குமராடா).. அருகே பாயும் மோயார் நதி. அந்த நதி அப்படியே சென்று பவானியில் கலக்குது. அப்பர் பவானி அணையின் அழகும் தெரியுது. ஆஹா என்ன அருமை. என்னைக் கேட்டால் உலகத்திலேயே வாழ அழகான இடம் அந்த தெங்குமராடா கிராமமுன்னு தான் சொல்லுவேன். என்ன அருமையான சூழல். காட்சிமுனை கோபுரத்தில் இருந்து பார்த்தால்தான் இந்த இடம் எவ்வளவு உயரத்தில் இருக்குன்னு தெரியுது. பக்கத்திலேயே ரங்கசாமி சிகரம் இருக்கு. அதைவிட உயரத்தில் இருக்கு இந்த இடம். உண்மையிலேயே காலடியில் மேகங்கள் தவழுது. பறவைப் பார்வைன்னு சொல்லுவாங்களே. அதை இங்க சூப்பரா அனுபவிக்கலாம்.
அழகான பசுமை பள்ளத்தாக்கு, அதில் ஓடும் நதிகள், அங்கே ஒரு அழகிய கிராமம், அணைக்கட்டு, சுற்றிலும் சூரியனின் வெள்ளி பூச்சு பூசியதுபோல சூரிய ஒளியில் குளிக்கும் மலைகள், ஆஹா வர்ணிக்க எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை.
சொல்ல மறந்துட்டேனே...இந்த அழகான தெங்குமராடா கிராமத்தில் தான் அன்னக்கிளி படத்தில் மச்சானைத் தேடும் பாடலை படமாக்கினாங்களாம். இந்த சரித்திரக் குறிப்பை எனக்கு சொன்னது டிரைவர் சரவணன்.
கீழே படத்தில் இருப்பதுதான் ரங்கசாமி சிகரம்.
கீழே படத்தில் கீகீகீழே.... தெரிவதுதான் தெங்கமராடா அருகில் மோயார் நதி
ரங்கசாமி சிகரமும் பவானி அணையின் ஒரு பகுதியும் கீழே
தெங்கமராடா கிராமத்திற்கு இந்த காட்சி முனையிலிருந்து இறங்கி ட்ரெக்கிங் செல்லலாமாம். ஆனால் அதுக்கு வனத்துறை அனுமதி பெற வேண்டுமாம். இந்த இடத்தில் சூரிய உதயமும் அஸ்தமனமும் அருமையாக இருக்கும் என்று சரவணன் சொன்னார்.
காட்சி கோபுரத்தின் கீழே ஒரே ஒரு கடை இருக்கிறது. அதற்கு பக்கத்தில் ஒரு இருவது படிகள் கீழிறங்கி செல்லலாம். போனால் இதே அழகை அங்கிருந்தும் ரசிக்கலாம். நாங்க இதை பார்த்து ரசித்துக் கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியலை. ரொம்ப நேரம் அங்கேயே இருந்தோம். ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள், பொதுவாக இங்கே வருவதில்லைன்னு சரவணன் சொன்னாரு. நீங்க ஊட்டி போனீங்கன்னா இந்த இடத்துக்கு கண்டிப்பா போங்க... தவறவிடாதீங்க...
ஒருவழியா மனசே இல்லாம அங்கிருந்து கிளமபி.. கோத்தகிரி வழியாவே ஊட்டி வந்தோம். சரவணன் அடுத்து எங்களை அழைத்து போன இடம் டீத்தூள் தயாரிக்கும் தொழிற்சாலை. பறித்த தேயிலைகளில் இருந்து டீ எப்படி தயாராகுதுன்னு காமிச்சாங்க. நல்லா இருந்தது. கூடவே குடிக்க டீயும் குடுத்தாங்க... ஊட்டி டீன்னா ஊட்டி டீதான். சூப்ப்ரா இருந்துச்சு. அங்கயே டீத்தூள் எல்லாருக்கும் வாங்கிகிட்டோம். ஊட்டியில பல இடங்களில் டீத்தூள் வித்தாலும் தரமான டீத்தூள் வாங்கணுமுன்னா நீங்க இங்கதான் (The nilgiri tea factory)போகணும். அங்க புதுசா வெள்ளை டீ ஒண்ணு இருந்துச்சு. அது குடிச்சா அவ்வளவு நல்லதாம், பல வியாதிகள் குணமாமுமாம். விலை ரொம்ப அதிகம். நான் பச்சை டீ தான் கேள்விப்பட்டிருக்கேன். வெள்ளை டீ இங்கதான் பார்த்தேன். இன்னொன்னு, இங்க கிடைக்கிற நீலகிரி தைலமும் நல்ல தரமானதா இருக்கு. Home made chocolates கூட நல்லா இருக்கு.
அங்கிருந்து நேரா நாங்க போனது, பொட்டானிக்கல் கார்டன் ஆனா எல்லாரும் அசதியா இருந்ததுனால இன்னொருநாள் போயிக்கலாமுன்னு உள்ளேயே போகாம திரும்பிட்டோம். அங்கிருந்து நேரா பையன் ரொம்ப ஆசைப் பட்டதுனால போட்டிங் போனோம். அங்க விளையாட்டுகள் நிறைய இருக்கு. ஆனா நாங்க படகுல மட்டும் போயிட்டு, அங்கிருந்த மினி ரயிலிலும் போயிட்டு திரும்பிட்டோம்.
6:30 மணிக்கெல்லாம் நல்லா இருட்டி போச்சு. நேரா தங்கிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தோம். நல்ல குளிரு வேற.ரூமில தரையில கால வைக்க முடியலை. என்னதான் heater போட்டாலும் வேலைக்காகலை. இருந்த கம்பளியை எடுத்து நல்லா போத்திகிட்டு பெட்டு மேலயே உட்கார்ந்திருந்தேன். 8 மணிக்கு இரவு உணவு தயாராகிடுச்சுன்னு விக்ரம் வந்து சொன்னாரு. குளிருக்கு இதமா சுடச் சுட அருமையான உணவு ரெடியா இருந்துச்சு. சாப்பாட்டுக்கு அப்புறம் என்ன சுகமான தூக்கம்தானே. நாள் முழுவதும் சுத்தினதுதான தூக்கம் சொக்கிடுச்சு. கொஞ்ச நேரம் டி.வி பாத்திட்டு தூங்கியாச்சு.
(தொடரும்................)
Thursday, August 7, 2008
தொட்டபெட்டா ரோட்டு மேல...
நீலகிரி எக்ஸ்பிரஸில் வந்த முதல் பகுதி இங்கே....
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வந்த இரண்டாம் பகுதி இங்கே
சரவணன் சொன்ன நேரத்துக்கு வந்துட்டாரு... காலை உணவு சாப்பிட்டு தொட்டபெட்டாக்கு வண்டியிலே கிளம்பியாச்சு. போற வழியிலெல்லாம் இருக்கும் இடங்கள் பற்றி சரவணன் சொல்லிக்கிட்டே வந்தாரு... எங்கே பார்த்தாலும் பச்சைப் பசேலுன்னு இருந்துச்சு, பாக்க பாக்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்துச்சு.
கோத்தகிரி ரோட்டுல போயி, தொட்டபெட்டாக்கு திரும்பும் இடத்திலிருந்து மேலே போக போக ரோடு ரொம்ப மோசமா இருந்துச்சு. வண்டிக்கு கட்டணம் வசூலிக்கிறாங்க.. ஆனா ரோட்டை பராமரிக்கவே இல்லை. என்ன இது எவ்வளவு சுற்றுலா பயணிங்க வராங்க... ரோடு நல்லா போடலாமில்லைன்னு சொன்னா, நம்ப சரவணன் சொன்னாரு, இந்த ரோடு 2 மாசத்துக்கு முன்னாடி போட்டது தானாம். என்னத்த சொல்றது..............என்ன கொடுமை சரவணன் இது?????????
ஒருவழியா வண்டி நிப்பாட்டும் இடத்துக்கு வந்து சேந்தாச்சு. ஆனா என்னாடா சிகரமுன்னு சொன்னாங்க... இங்க எதையும் காணோமேன்னு பார்த்தா...இதுக்கு மேல நடந்து போகணுமுன்னு சொன்னாங்க... கரடு முரடா இருந்த சின்னப் பாதையில ஏறினோம்... நம்ம வாண்டையும் தூக்கிக் கிட்டு, நம்ம உடம்பையும் தூக்கிகிட்டு ஏறுறதுக்குள்ள நாக்கு தள்ளிப் போச்சு.
மேல போனா அங்க நுழைவுச்சீட்டு வாங்கணுமுன்னு சொன்னாங்க...அதையும் வாங்கிட்டு... போனா ஊட்டியோட குளிரு என்னான்னு அங்கதான் நல்லா தெரிஞ்சது. ஆட்டிருச்சு ஆட்டி. தங்கமணி முன்னேற்பாடா sweater (இதுக்கு தமிழில் என்ன??....) எடுத்துட்டு வந்திருந்தாங்க.. நான் ரொம்ப பந்தாவா, ஜூலை மாசத்தில ஊட்டியில குளிராதுன்னு சொல்லி எதுவும் எடுத்துட்டு வரலை. ஊட்டிக்கு வந்தபோது கூட அவ்வளவு குளிராயில்லை... ஆனா தொட்டபெட்டாவுல குளிர் ஆட்டிருச்சு.. தங்கமணி நக்கலா என்னைப் பாத்தாங்க.."ஒழுங்கா sweater எடுத்துட்டு வந்திருக்கலாமுல்ல"ன்னு சொன்னாங்க. ஆனா நம்ம யாரு... குளிராத மாதிரியே... "இதெல்லாம் ஒரு குளிரா" எனக்கு ஒண்ணும் குளிரலைன்னு சொன்னா...."இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை"ன்னு பதில் வருது. எதுக்கு குறைச்சலில்லை?????
தொட்டபெட்டா சிகரத்தில பார்த்தா அருமையான இயற்கை காட்சிகள் எல்லாம் காணக்கிடைக்குது. ஒரு காட்சி முனை (view point) கட்டடம் இருக்கு. அது மேல ஏறினா அங்க தொலைநோக்கியை வச்சு ஊட்டி ரேஸ் கோர்ஸ் காமிச்சாங்க.. நானும் பார்த்தேன்.. என்னக்கு என்னமோ பச்சையா தெரிஞ்சது...(no....அந்தப் பச்சையில்லை. நான் சொன்னது Green அந்தப் பச்சை. தமிழில் எல்லா வார்த்தைக்கும் இன்னோரு அர்த்தம் இருக்குடா சாமி)
சிகரத்தின் மேலேயே ரொம்ப நேரம் இருந்தோம்.. சின்னப் பூங்கா ஒண்ணு இருந்தது... நல்லா பராமரிச்சு வச்சிருந்தாங்க... அங்கேயே ரொம்ப நேரம் உட்கார்ந்து ரசிச்சிட்டு இருந்தோம்.
அப்போ நம்ம சரவணன் இந்த இடம் திருடா திருடா படத்தில் வரும் என்ற சரித்திரக் குறிப்பு சொன்னாரு. இந்த மாதிரி நிறைய சரித்திரக் குறிப்புகள் சொன்னாரு.. அதையெல்லாம் உங்களுக்கு சொல்லுவது என்னோட கடமை.
சரி தொட்ட பெட்டா வந்துட்டோமே... முட்டை பரோட்டா சாப்பிடலாமான்னு பார்த்தா... அது கிடைக்கலை. ஆனா சுட சுட மிளகாய் பஜ்ஜி இருந்துச்சு. அதை விடலாமா... ஒரு கை பாத்தாச்சு... குளிரில் சூடான பஜ்ஜி சூப்பரா இருந்துச்சு.
இங்கயே இருந்தா நேரமாகிடும் அடுத்து கோத்தகிரி வழியா கொடநாடு போகலாமுன்னு கிளம்பி, மறுபடி அதே வண்டி நிறுத்தும் இடத்துக்கு சின்னப் பாதை வழியா இறங்கி வந்தோம். அந்த பாதை முழுவதும் சின்ன சின்ன கடைகள். தொப்பி, கண்ணாடி, சூடான கடலை, கேரட் எல்லாம் இருந்தது. கேரட் அப்போத்தான் பறிச்சா மாதிரி பாக்குறதுக்கு சூப்பரா இருந்தது.
ஒருவழியா வண்டிக்கு வந்து ஏறி கொடநாடுக்கு கிளம்பியாச்சு..... அடுத்த பகுதியில போயிடலாம்....................
(தொடரும்...)
Wednesday, July 30, 2008
ஊ.ம.சா- பகுதி-2
படிச்சிட்டீங்களா? அப்ப நம்ம தொடருவோம்.
மேட்டுப்பாளையத்தில் இறங்கின உடனே பெரும் அதிர்ச்சின்னு சொன்னேனே.. என்ன தெரியுமா... அந்த ஜோடி இறங்கின உடனே ஒருத்தரை ஒருத்தர் பாத்து சிரிச்சாங்க.... அப்புறம் அந்த பையன் அங்க காத்துகிட்டு இருந்த இன்னோரு பொண்ணோடயும், அந்த பொண்ணு இன்னோரு பையனோடயும் கிளம்பி போயிட்டாங்க..........ன்னு சொன்னா கதைக்கு சூப்பராத்தான் இருக்கும். ஆனா அப்படி ஏதும் நடக்கலையே...அவங்க ரெண்டு பேரும் எங்களுக்கு முன்னாடியே இறங்கிப் போயிட்டாங்க. அதுனால என்ன நடந்துச்சுன்னு நான் பார்க்கலை....
அப்புறம் என்ன அதிர்ச்சின்னு கேக்குறீங்களா??? அதுக்கு கொஞ்சம் முன்கதை விளக்கம் சொல்லணும். நானும் சரி, தங்கமணியும் சரி ஊட்டிக்கு போறது இதுதான் முதல்முறை. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு எப்படி போறதுன்னு தெரியாது. நாலு படிச்சவங்ககிட்ட கேட்டதில மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி மலை ரயில் வழியாவோ இல்லைன்னா பேருந்து புடிச்சு போயிடலாமுன்னு சொன்னாங்க....
சரி ஏதோ படிச்சவங்க சொல்லுறாங்க கேட்டுகிடுவோமுன்னு நினைச்சு வந்தேன். அவங்க கொடுத்த பில்டப்பு பாத்து மேட்டுப்பாளையம் ஸ்டேஷன் ரொம்ப பெரிசா இருக்குமுன்னு நினைச்சிட்டு இருந்தேன்.
ஆனா மே.பா.-வில் இறங்கி பார்த்தா.... ஒர்ரே ஒரு ப்ளாட்பார்ம் அதுதான் ஸ்டேஷன். அதுதான் ரொம்ப அதிர்ச்சியாயிடுச்சு.
அப்புறம் அங்க இருந்த உணவகத்தில் ஒரு காபியைக் குடிச்சுட்டு இருக்கும் போது ஊட்டி மலை ரயில் புகை விட்டுக்கிட்டே வந்துச்சு. பார்க்க சூப்பரா இருந்துச்சு. சரி அதுலயே போயிறலாமுன்னு டிக்கெட் எடுக்கலாமுன்னு பார்த்தா அதுக்கு ஒரு பெரிய வரிசை நின்னுட்டு இருந்துச்சு. ஆத்தாடி இதுல நின்னு டிக்கெட் எடுக்கறதுக்குள்ள வண்டியே போயிரும் போலருக்கேன்னு நினைச்சிட்டு இருக்கும்போது அங்க இருந்த இன்னொரு படிச்சவர் சொன்னாரு... இந்த வண்டி ஊட்டி போயிச் சேர 5 மணி நேரம் ஆகும். மழை வந்து பாதையில் ஏதாவது பிரச்சனை வந்தா இன்னும் கூட தாமதமாகுமுன்னு சொன்னாரு. ஆஹா நம்ம 3 வயசு வாண்டுவை வச்சுகிட்டு இதுல போறதுக்கு தோதுப்படாதுன்னு தங்கமணி அன்பா சொல்லிட்டாங்க...
தங்கமணி அன்பா சொன்னதுக்கு அப்பீல் உண்டா? உடனே சரின்னு சொல்லிட்டேன். ஆனா அடுத்தமுறை ஊட்டி வரும்போது கண்டிப்பா மலை ரயில்ல தான் போகணுமுன்னு சொல்லிட்டேன். உங்களுக்கு மலை ரயிலப் பத்தி தெரிஞ்சுக்கணுமுன்னா இங்க போயி பாருங்கப்பு
சரி பேருந்துநிலையத்துக்கு எப்படி போறதுன்னு அதே படிச்சவரைக் கேட்டா அவரு ரயில தாண்டி போகணுமுன்னு சொன்னாரு.. .ஆஹா ரயிலை எப்படிடா தாண்டுறதுன்னு யோசிச்சு (பழைய ஜோக்கு...சரி சரி.........) அப்புறம்தான் அந்த நடை மேம்பாலத்தை (அடடா......தமிழ்...தமிழ்........) பார்த்தேன். அதில் ஏறப்போகும் போதே ஒரு நாலு அஞ்சு பேரு "சார் சார் டாக்ஸி வேணுமான்னு கேட்டாங்க"... அட ஊட்டிக்கு போக இப்படி ஒரு வழியிருக்கே... பேருந்துல போக வேணாமேன்னு நினைச்சேன். ஆனா தங்கமணி moneyயை காரணம் காட்டி வேணாமுன்னு சொல்லுவாங்களேன்னு நினைச்சப்போ......தங்கமணியே மிக மிக அன்பா... "குழந்தையையும்... பயணச்சாமான்களையும் வெச்சுக்கிட்டு பேருந்துல போறது ரொம்ப கஷ்டமாயிருக்குமுன்னு நினைக்கிறேன். நம்ம டாக்ஸியில போயிறலாமா"-ன்னு கேட்டாங்க... ஆஹான்னு உடனே சரின்னு சொல்லியாச்சு.
சரின்னு ஒரு டிரைவர் கிட்டே பேரம் பேசி முடிச்சு அவரு வண்டியிலயே போயிறலாமுன்னு ஏறியாச்சு..
இங்க இந்த டிரைவரைப் பற்றி சொல்லணும். உண்மையிலேயே இவர் கிடைத்தது எங்க அதிர்ஷ்டமுன்னுதான் சொல்லணும். நியாயமான வாடகை. நல்ல உபசரிப்பு...அழகான கொங்குத் தமிழ்....நிறைய உதவி... இப்படி ஒரு டிரைவரைப் பார்ப்பது அபூர்வம்... அவரு பேரு சரவணக்குமார். நீங்க ஊட்டி போனீங்கன்னா நம்பி அவரு வண்டியில ஏறலாம். மேலும் தொடர்பு கொள்ளும் விவரங்களுக்கு எனக்கு ஒரு மின்னஞ்சல் தட்டி விடுங்க.....
குன்னூரு வழியா சரவணன் எங்களை ஊட்டிக்கு கூட்டிப்போனாரு. போற வழியில் நிறைய இடங்களில் நிறுத்தி அதைப் பத்தி விளக்கினாரு......அவரே இருக்குப்போற மூணு நாளையும் என்ன என்ன இடத்துக்கு போகலாமுன்னு சொன்னாரு. எங்க முதலில் எங்க இரண்டாவ்துன்னு அவரே ஒரு திட்டமும் சொன்னாரு. நான் விருப்பப்பட்டா அவரே எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போறதா சொன்னாரு. வாடகை விவரமும் சொன்னாரு. ஆனா நான் ஏற்கனவே தங்குமிடத்தில் சொல்லி வைத்திருந்தேன். உடனே தங்குமிடப் பொறுப்பாளருக்கு தொலைபேசி... பயண திட்டத்தை சொல்லி, அதுக்கு வண்டி வாடகை விவரம் கேட்டேன். ஆனா அவரு சொன்னது ரொம்ப ரொம்ப அதிகமா இருந்தது. அதனால சரவணன் வண்டியே எடுத்துக்கலாமுன்னு முடிவு செஞ்சு சரவணன்கிட்டே ஓ.கே சொல்லியாச்சு.
நான் வேலை செய்யும் கம்பெனியின் விருந்தினர் மாளிகையில் தான் தங்குவதுக்கு ஏற்பாடு செஞ்சு வெச்சிருந்தேன். சரவணன் 8:30 மணிக்கு அங்கே கொண்டு போய் சேத்துட்டாரு...அவரு சொன்ன திட்டத்தின்படி, அன்னிக்கே தொட்டபெட்டாவும், கொடநாடும் (ஆமா ஆமா அதே கொடநாடுதான்...) போகணும். சரின்னு விருந்தினர் மாளிகையிலுள்ள சமையல்காரரை காலை உணவு தயாரிக்க சொல்லிவிட்டு நாங்கள் அறைக்கு சென்று குளித்து முடித்து உணவுக்காக காத்துக் கொண்டிருந்தோம்..
உணவு தயாரானதும் வந்து சாப்பிடும்போது...பொறுப்பாளர் விக்ரம் இரவு உணவு தேவையான்னு கேட்டாரு. என்னாடா இப்போவே கேக்குறாங்கன்னு விசாரிச்சா... இரவு உணவு, அடுத்த நாள் பகல் உணவு எல்லாம் வேணுமான்னு முதநாளே சொல்லிடணுமாம். ஏன்னா இந்த இடம் ஊருக்கு வெளியே இருக்கு. நாம சொல்லுறது வெச்சுத்தான் அவங்க போய் பொருட்கள் வாங்கிட்டு வந்து உணவு தயாரிக்கணும். சக ஊழியர்கள் இங்கு கிடைக்கும் உணவு பற்றி ரொம்ப புகழ்ந்து சொல்லியிருந்ததால உணவு வேணுமுன்னு சொல்லியாச்சு
சரவணனும் சொன்னா மாதிரி வந்துட்டாரு. இனிமே என்னா... நேரா தொட்டபெட்டாதான்.....
அடுத்த பகுதியில போயிரலாம்.
இப்போ நாங்க தங்கிய விருந்தினர் மாளிகையையும், அதைச் சுற்றி இருந்த இடங்களையும் எனது மூன்றாவது கண்ணால் சுட்டதை பாருங்க......
இங்கே இருக்கும் ரெண்டு வித்யாசமான செடியை அங்குதான் முதலில் பார்த்தேன். இலைகளே பூக்கள் வடிவில் சூப்பரா இருந்துச்சு...
இது இன்னொன்னு
அங்கிருந்த மேலும் சில பூக்கள்
(தொடரும்............)
Thursday, July 24, 2008
ஊட்டி மலைச் சாரலிலே.....
"சார் மேட்டுப்பாளையம்......" ரயில்வே ஊழியர் வந்து எழுப்பும்போது மணி பார்த்தேன்.... காலை 5:45...என்னங்க.... 45 நிமிடம் முன்னாடி கோயமுத்தூர்ல கேட்டபோது இன்னும் ஒரு மணி நேரமாகும்முன்னு சொன்னீங்களேன்னு கேட்டா.... சிரிச்சுகிட்டே டிரைவர் வேகமா ஓட்டிட்டு வந்துட்டார் சார்-ன்னு சொல்லுறார்..... எல்லாம் நேரம்.....
முதல்நாள் இரவு சென்னை சென்ட்ரலில் வண்டி கிளம்பினதே அரை மணி நேரம் தாமதம்....3ம் வகுப்பு ஏசியில் எங்க சீட் இருந்த ஜன்னலில் இருந்த கண்ணாடி மட்டும் கருப்பா வெளியில் இருப்பது எதுவுமே தெரியாத மாதிரி இருந்தது. என் மகனுக்கு ரயில் ரொம்ப பிடிக்கும்... கண்ணாடி வழியா எதுவுமே தெரியாததனால ஒரே அழுகை...அப்புறம் ராத்திரியானதுனாலதான் எதுவுமே தெரியலைன்னு சொல்லி சமாளிச்சேன்... ஒரு மில்கிபார்கூட அழுகையை நிறுத்த உதவியது.....
என் இருக்கைக்கு பக்கத்தில் இருந்த side berth-ல் (இதுக்கு தமிழில் என்ன??) ஒரு ஜோடி வந்து உட்கார்ந்தது.... ரெண்டு பேரும் RAC. TTR இந்த ஒரு இடத்தை குடுத்துட்டு போயிட்டார்... ரொம்ப நேரம் ஒரே பேச்சும் சிரிப்புமா இருந்தது. இதை பார்த்துக்கிட்டு இருந்தபோது ஒரு இடி.. வேற யாரு தங்கமணிதான்....என்ன வேடிக்கை வேண்டிகிடக்கு... பையன் தூங்கணும் லைட்டை அணைச்சுட்டு படுங்கன்னு ரொம்ப அன்பா சொன்னாங்க.... இல்லை இந்த பக்கம் கண்ணாடி சரியா தெரியலையில்ல அதுதான் அந்தப் பக்க கண்ணாடியப் பார்த்துக்கிட்டு இருந்தேன்ன்னு சொன்னேன்.. வழக்கம்போல தங்கமணி அதை நம்பினா மாதிரி தெரியலை... சரி அதுக்கு மேல தங்கமணிய பொங்க விட வேணாமுன்னு அந்த ஜோடிகிட்ட சொல்லி லைட்டை அணைச்சுட்டு படுத்தாச்சு..
ஆனா அங்க பேச்சு ஓயவேயில்லை.... மெதுவான குரலில் ஏதோ பேசிட்டே இருந்தது அந்த ஜோடி.... கிளு கிளுன்னு சிரிப்பு வேற...சரின்னு நான் ipod எடுத்து பாட்டு கேட்க தொடங்கிட்டேன்....அப்படியே தூங்கியாச்சு.....
ஏதோ ஒரு ஊரில் வண்டி நின்னவுடன் முழிப்பு வந்தது.. வண்டி அங்கிருந்து கிளம்பினவுடனே... பார்த்தா.. ஜோடில பொண்ணு மட்டும் படுத்து தூங்கிட்டு இருந்தது.,.. பையனக் காணோம். அப்புறம் தான் பார்த்தேன், அந்த பையன் வெளியில் நின்னு புகை விட்டுகிட்டிருந்தான்... சரி நமக்கெதுக்குன்னு வந்த வேலைய பார்த்துட்டு திரும்பி வந்து படுத்தா... கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கசமுசன்னு ஒரே சத்தம்... படுத்தபடியே என்னன்னு காது குடுத்து கேட்டா (no no never....ஒட்டுக்கேக்கலை....) பொண்ணுக்கு பையன் தம்மடிச்சது தெரிஞ்சு போச்சு... எப்படி என்கிட்ட நிறுத்துறேன்னு சத்தியம் பண்ணிட்டு எனக்கு தெரியாம தம்மடிச்சன்னு பொண்ணுக்கு கோவம்.. பையன் கெஞ்சறான்... கொஞ்சறான்... அந்த பொண்ணு எதுக்கு மசியலை..எனக்கு ரொம்ப தூக்கம் வந்ததால மறுபடியும் தூங்கிபோயிட்டேன்....
கோயமுத்தூர் வந்தவுடனே ரயில்வே ஊழியர் சார்ட் வச்சு சரிபார்த்து அங்க இறங்க வேண்டியவர்களை எழுப்பினார்.... லைட் எல்லாம் போட்டதால் என் தூக்கம் கெட்டது... கோயமுத்தூரில் வண்டி 30 நிமிடம் நிற்குமுன்னு அவர் சொன்னதுனால வண்டியை விட்டு கீழே இறங்கி நின்னுட்டிருந்தேன்... அங்க ஒரு தள்ளு வண்டி இருந்தது... அதுல உட்கார்ந்து அந்த பையன் மறுபடியும் தம்மடிச்சிட்டு இருந்தான்.. ஆஹா இவன் சரியான கில்லாடியா இருப்பான் போலிருக்கேன்னு நினைச்சேன்..... ஒரு பத்து நிமிடம் ஆன பிறகு அந்த பொண்ணு வந்தது... .sanjay what are you doing here..... ன்னு கேட்டது.. அவன் கூலா சொல்றான் i just came out for a tea honey... the tea is good here would you like to try.............சூப்பரப்பு. சரியான தில்லாலங்கடி....
கோயமுத்தூரில் இருந்து கிளம்பும் போது கேட்டப்போதான் ரயில்வே ஊழியர் மேட்டுப்பாளையம் போக இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமுன்னு சொன்னாரு... அவரை நம்பி மறுபடியும் தூங்கப் போனா 45 நிமிடத்திலேயே எழுப்பி வந்து சேந்தாச்சுன்னு சொல்லுறாரு...
பக்கத்தில் தூங்கிட்டு இருந்த தங்கமணியையும் பையனையும் எழுப்பி, சாமான்களையெல்லாம் எடுத்துக்கிட்டு இறங்கினா... எனக்கு ஒரே அதிர்ச்சி.....
அது என்னான்னு அடுத்த பகுதியில் பார்க்கலாம்...
- தொடரும்................
Wednesday, July 16, 2008
மறுபடியும்.....
மறுபடியும் 2007 ஜனவரியில் தான் நானும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் வந்தது....என்ன எழுதுவதென்று தெரியவில்லை. ஏதோ படித்த செய்திகளை வைத்து பதிவுகள் என்ற பெயரில் ஏதோ எழுதி வந்தேன். பின் நான் சென்று வந்த பயணங்களைப் பற்றி எழுதினேன்... தொடர்ந்து 2007 மே மாதம் வரை எழுதி வந்தேன்.
2007 ஜூலை மாதத்தில் சில சொந்த பிரச்சனைகள் காரணமாக எழுத நேரம் ஒதுக்க முடியவில்லை. 2007 செப்டம்பரில் புதிய வேலையில் சேர்ந்தேன்... புதிய இடம், புதிய சூழல், வேலைப் பளுவும் பொறுப்புகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழ்நிலை...அப்போது தொடங்கி பதிவுகள் படிக்ககூட என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை....
மறுபடியும்....இப்போது எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நண்பர்களின் வற்புறுத்தல்தான். என்னால் முடிந்த அளவு நேரம் ஒதுக்கி பதிவிட முயற்சிப்பேன்.....
மறுபடியும், "மறுபடியும்...." என்ற பதிவு எழுதாமல் இருக்க முயற்சிக்கிறேன்.
disc : மேலே இருக்கும் படம் நான் எடுத்ததுதான். ஊட்டியில். இதனால் என்ன தெரியுது? நான் அடுத்ததா ஊட்டி பயணத்தைதான் எழுதப்போறேன்.....