Wednesday, January 23, 2008

மனம் விரும்புதே


நீங்க "நேருக்கு நேர்" படத்திலிருந்து "மனம் விரும்புதே" பாட்டு கேட்டிருப்பீங்க.. எனக்கும் அது வெளி வந்த காலத்தில் ரொம்ப பிடிச்ச பாட்டு. ரொம்ப நாளுக்கு பிறகு அந்த பாடலை நேற்று கேட்டேன். எனக்கு என் நண்பன் ரவியின் நினைவுதான் வந்தது.
ரவி என்னோட திருச்சியில் படித்தான். எங்க காலேஜ் திருச்சியில் இருந்தது. என் வீடு இருந்தது ஸ்ரீரங்கம். ( பாத்தீங்களா.... நானும் நம்ம சுஜாதா மாதிரிதான். அதுக்காக இதை நீங்க ஸ்ரீரங்கத்து தேவதைகளோட ஒப்பிட வேணாம். )
ரவி வீடும் என் வீடும் ஒரே தெருவில் தான் இருந்தது. நாங்க கல்லூரியிலும் சேர்ந்துதான் படிச்சோம். ரெண்டு பேரும் ஒன்னாதான் காலேஜுக்கு போய்வருவோம். இதனாலேயே நாங்க ரொம்ப நெருங்கிய நண்பர்களாயிட்டோம். ரவி ரொம்ப அப்பாவி. நான் என்ன சொன்னாலும் நம்பிடுவான். ஏன்னு தெரியலை, ஆனா நான் பொய்யே சொல்லமாட்டேன்னு என் மேல் அவனுக்கு அபார நம்பிக்கை. அது உண்மைதான். (சரி சரி ... சிரிக்க வேணாம்............) ஆனா எனக்கு அவனிடம் சின்ன சின்ன பொய் சொல்லி விளையாடறது ரொம்ப பிடிக்கும்.
அது நேருக்கு நேர் வெளிவந்த காலகட்டம். மனம் விரும்புதே உன்னை பாடல், பாட்டுக்காகவும்
சிம்ரனுக்காகவும் சக்கை போடு போட்டுகொண்டிருந்தது. ரவிக்கும் இந்த பாடல் பிடிக்கும். ஒரு நாள் நாங்க காலேஜ் போயிட்டிருக்கும்போது பஸ்ஸில் இந்த பாடல் ஒலித்தது. அப்போ நான் ரவி கிட்ட "ரவி இந்த பாட்டு நான் எழுதினது தான்" னு சொன்னேன். சென்னையில் இருக்கும் என் மாமா தேவாவின் நண்பர். என் மாமா நான் எழுதின கவிதையெல்லாம் தேவா கிட்ட காட்டியிருக்காரு. அது அவருக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. உடனே எனக்கு என் மாமா எனக்கு போன் செய்தார். போனிலேயே நான் இந்த பாடலை சொல்ல தேவா அதை இந்த படத்தில் உபயோகிச்சிருக்காரு-ன்னு சொன்னேன். அவனும் அதை ரொம்ப நாள் நம்பிட்டு இருந்தான்.
கொஞ்ச நாளுக்கு பிறகு என் சென்னை மாமா எங்க வீட்டுக்கு வந்திருந்தார். அப்போ ரவியும் எங்க வீட்டுக்கு வந்தான். எங்க வீட்டில் எல்லாருக்கும் ரவியை தெரியும் என்பதால், என் மாமாவும் ரவியும் பேசிகிட்டு இருந்தாங்க. அப்போதான் என் குட்டு உடைஞ்சது. ஆனாலும் ரவி என்னை எதுவுமே கேட்கவில்லை. அதன் பின் நானே அவனிடம் மன்னிப்பு கேட்டேன். அவன் "விளையாட்டுக்குத்தானேடா நீ அப்படி சொன்ன. அதுக்கு எதுக்கு மன்னிப்பு" ன்னு சொன்னான்.
எனக்கு இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் ரவி நினைவுதான் வரும்.
எனக்கு கிடைத்த மிகச் சிறந்த நண்பர்களில் ரவியும் ஒருவன்.
குறிப்பு : எனக்கு "மனம் விரும்புதே உன்னை" பாட்டின் மூலமான "மனவியாலகிம் " என்ற தியாகராஜருடைய கீர்த்தனை ரொம்ப பிடிக்கும்.