Tuesday, June 12, 2007

அர்ஜுனன் தவம்

பல்லவர் பூமி -3

ஐந்து ரதங்கள் பார்த்து விட்டு அங்கிருந்து அர்ஜுனன் தவம் பார்க்க போனாம்.. ஒரு குன்றுக்கு பக்கத்தில இறக்கிவிட்டு மேல ஏற சொல்லிட்டாங்க.... நண்பகல் உச்சி வெயில் 12 மணிக்கு ஏறணுமுன்னு நினைக்கும் போதே சோம்பலாயிடுச்சு. இருந்தாலும் கூட வந்த வெளிநாட்டு அண்ணாத்தே பாக்கணுமுன்னு சொன்னதால, ஏற வேண்டியதாப் போச்சு......

மேலே ஏறும் பாதையை படத்தில் பாருங்க..... மரங்களுக்கு நடுவில் தெரிவது தான் பல்லவர் காலத்தின் கலங்கரை விளக்கம்.
மேல ஏறும் பாதையில் மகிஷாசுர மர்தினி சிற்பங்கள் இருக்கு... அதுக்கு மேல பல்லவர் காலத்தில் கட்டின கலங்கரை விளக்கமும், பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் கட்டின கலங்கரை விளக்கமும் இருந்தது... படத்தை பாருங்க.....




இதுதான் மகிஷாசுர மர்தினி சிற்பங்கள் இருக்கும் இடம்












இதுதான் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம்.... வெயில் அதிகம் இருந்ததால மேலே ஏறவில்லை.










இது ஆங்கிலேயரால் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம். ஆனால் இப்போ இதுவும் உபயோகத்தில் இல்லை.







இதைத் தாண்டி கீழே இறங்கும் வழி முழுவதும் சிற்பங்கள் நிறைய இருக்கு. ஒரு குன்று முழுவதும் சிற்பங்கள் செதுக்கி இருக்காங்கன்னா அந்த காலத்தில் சிற்பக்கலை எவ்வளவு சிறந்து விளங்கியிருக்க வேண்டும்... நினைச்சு பார்க்கவே ஆச்சரியமா இருக்கு... இப்பவும் கூட மாமல்லபுரத்தில் உளி சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கு.....

இதைப் பற்றி பேசிக்கிட்டே கீழே இறங்கினோம்.. அங்க ராயர் மண்டபம் இருக்கு. அதைப் பற்றி கேட்டால் மக்கள் உடனே சொல்லுவது தளபதி பற்றிதான்..... பல்லவர் காலத்து தளபதியில்லை........ நம்ம சூப்பர் ஸ்டார் நடிச்ச தளபதி படம்....... இங்கதான் ராக்கம்மா கையத்தட்டு பாட்டு எடுத்தாங்களாம்.... ஆஹா என்ன ஒரு சரித்திரப் புகழ் பெற்ற தலம்......................ராயர் பற்றி கேட்டா ரஜினி பத்தி சொல்லுறாங்க....என்னத்த சொல்ல....








பின்னர் கீழே கிருஷ்ணனின் வெண்ணை பந்து இருக்கு.... ஒரு பெரிய உருண்டையான பாறை... இன்னோரு பாறை மேல் எந்த பிடிப்பும் இல்லாம இருக்கு.... இதைத் தான் கிருஷ்ணரின் வெண்ணை உருண்டைன்னு சொல்லுறாங்க....



சரி அர்ஜுனன் தவமுன்னு சொன்னாங்களே அதைக் காணோமேன்னு கேட்டா வண்டி நிறுத்திய இடத்துக்கிட்டயே இருக்குன்னு சொன்னாங்க... வெளில வந்து பார்த்தா உண்மையிலேயே மலைச்சு போயிட்டேன்......அந்த பாறையின் பக்கம் முழுவதும் சிற்பங்கள் செதுக்கிருக்காங்க...... படங்களைப் பாருங்க...






இதுல அர்ஜுனனை தேடி இந்த படத்தில் தலைக்கு மேல் கையை வெச்சு தவம் பண்ணுபவர்தான் அர்ஜுனன்னு நினைச்சேன்....














அவர் இல்லை இந்த படத்தில் தவக்கோலத்தில் இருப்பவர்தான்னு சொன்னாங்க..... சரியான்னு தெரியலை... தெரிஞ்சவங்க சொல்லுங்க.....









(தொடரும்)

பல்லவர் பூமி - 1. மாமல்லபுரம் கடற்கரைக் கோவில்கள்
பல்லவர் பூமி-2 ஐந்து ரதங்கள்

Thursday, May 31, 2007

பல்லவர் பூமி-2 ஐந்து ரதங்கள்

ஐந்து ரதங்கள்...இவை காலத்தால் கடற்கரைக் கோவில்களுக்கு முந்தியவை என்றாலும் நன்றாகப் பராமரிக்கப்பட்டு இருக்கின்றன.... இதில் இருக்கும் ஒவ்வொரு ரதமும், வித விதமான கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டிருக்கின்றன....படங்களைப் பாருங்கள்........

திரெளபதி ரதம்

திரெளபதி

அர்ஜுனன் ரதம்

பீமன் ரதம்

தர்மன் ரதம்
நகுல - சகாதேவ ரதம்
தகவல் பலகை
சிங்கம்
யானை
நந்தி... நானும் இதை தனியா படமெடுக்க ரொம்ப நேரம் காத்திருந்தேன். ஆனா மக்கள் விடலை. சரிபோகட்டுமுன்னு நந்தி முகத்தை மட்டும் எடுக்கலாம்னு முயற்சி பண்ணினேன். கரெக்டா இந்த வாண்டு குறுக்க வந்துட்டான். :(
மேலும் சில படங்கள்





தொடரும்.....

Wednesday, May 23, 2007

பல்லவர் பூமி - 1. மாமல்லபுரம் கடற்கரைக் கோவில்கள்

சமீபத்தில் மாமல்லபுரமும் காஞ்சிபுரமும் போக சந்தர்ப்பம் கிடைத்தது. நல்ல இனிய அனுபவம். போன முறை மாதிரியில்லாம நிறைய படங்களும் எடுத்தேன். அப்புறம் எதுக்கு சும்மா இருக்கணும் பதிவு போடவேண்டியதுதானே.....இதோ முதல் பகுதி.

முதல்ல நான் போனது கடற்கரைக் கோவிலுக்கு. பேருதான் கோவிலே தவிர இப்போ இது கோவில் இல்லை. ஒரு புராதன சின்னமாதான் இருக்கு.

கோவிலுக்கும், ஐந்து ரதங்களுக்கும் டிக்கெட் வாங்கணும். நம்ம ஆட்களுக்கு ரூ.10. வெளிநாட்டினருக்கு USD 5 or ரூ.250. எங்களோட ஒரு வெளிநாட்டு அண்ணாத்தேயும் வந்திருந்தாரு. சரின்னு அவருக்கு 5 டாலர் கொடுத்தா வாங்க மாட்டேன்னுட்டாங்க... 250 தான் தரணுமாம். முதல்ல எனக்கு புரியலை. அப்புறம் வீட்டுக்கு வந்து இணையத்தில் பார்தப்போதான் புரிஞ்சது. 5 டாலர் இன்னிக்கு தேதிக்கு ரூ.203 தான். என்னத்த சொல்ல..... சரி கோவிலைப் பார்ப்போம்.

மாமல்லபுரத்தில் வித விதமான சிற்பக்கலைகள் இருக்கு. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், மலையைக் குடைந்து செதுக்கப்பட்ட சிற்பங்கள். இப்படி பல, இந்த கடற்கரைக் கோவில்களில் உள்ளவை பெரும்பாலும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்

இங்க இருப்பது ரெண்டு கோவில்கள். படத்தில பார்த்தா ரெண்டு கோபுரங்கள் தெரியும். பெரிய கோபுரம் கடல் பார்த்து கிழக்கு நோக்கி இருக்கு.

இங்கே இருப்பது தாராலிங்கம் என்னும் லிங்கம். இது ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்பட்ட கடப்பா கல்லினால் ஆன பட்டைகளை வைத்து உருவாக்கப் பட்டது. இது 8 அடி உயரத்தில் இருந்ததாம். இப்போ மேல் பாகம் உடைந்து இருக்கு. ஏதோ ஒரு போரில் சிதைக்கப்பட்டதாக சொல்லுறாங்க... ..













இந்த கோவில் வரை கடல் இருந்திருக்கு. 1984-ல் இந்திய பிரதமர் உத்தரவின் படி ஒரு கல் சுவர் அமைத்து கடலை தடுத்து இருக்காங்க... படத்தில பாருங்க






இந்த கோவிலுக்கு பின்புறம் ஒரு பெருமாள் சன்னதி இருக்கு. பள்ளி கொண்ட பெருமாள். இவர் ஒரே கல்லினால் ஆனவர். இவருக்கு நேர் கோட்டில் வெளியே ஒரு சிங்கமும், பலியிடப்பட்ட மானின் சிற்பமும் இருக்கு. இவைகளும், பெருமாளும் ஒரே கல்லினால் ஆனதாம். அதாவது உள்ளே இருக்கும் பெருமாளை செதுக்கிய அதே கல், வெளியே வரை நீண்டிருக்கு, அதிலேயே சிங்கமும், மானும் இருக்கும் பீடம் செதுக்கப் பட்டு இருக்கு. கேக்கவே பிரமிப்பா இருக்கு. எவ்வளவு திட்டமிட்டு இதை செய்து இருக்கணும். அசாதாரணமான கற்பனை வளம். சிங்கமும், பலியிடப்பட்ட மானும் கீழே இருக்கு பாருங்க..


இதுக்கு பின்னால் சிறிய கோபுரத்தை உடைய சோமஸ்கந்தர் சன்னதி இருக்கு.அவரை கதவின் ஓட்டை வழியா படம் எடுத்தேன். குடும்பத்தோடு இருக்கார். இந்த சிறிய கோபுரம் கடப்பா கல்லினால் கட்டப்பட்டு இருக்கு. இதுக்கு முன்புறம் ஒரு மண்டபம் இருந்திருக்கு, இப்போ அதன் அடித்தளம் மட்டும் இருக்கு.




அது மட்டுமில்லாமல் ரெண்டு பளிங்கு தூண்களும் இருந்திருக்கு. இப்போ வெறும் அடிப்பகுதி மட்டும் தான் இருக்கு. படத்தைப் பாருங்க...









கோவிலைச் சுற்றி பெரிய மதில் சுவர் இருந்திருக்க வேண்டும், அதன் மேல் நந்திகள் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். இப்போ சில சிதைந்த நந்திகளை மட்டும் வெச்சிருக்காங்க...








கோவிலுக்கு வெளியே அகழ்வாராய்சி செய்யும்போது, இந்த இடத்தை கண்டு பிடிச்சிருக்காங்க.

இது ஆதிவராகர் சிலை. பன்றி முகம், யானை உடல், காளையின் கால்களைக் கொண்டது. பக்கத்திலேயே ஒரு தூணும், ஊற்றும் இருக்கு. இந்த ஊற்று தண்ணீர் சுவையாக இருக்குமாம்.

பல்லவர்காலத்தில இருந்த சிற்பக்கலை வளர்ச்சிக்கு இந்த கோவில் நல்ல சான்று. கடலுக்கு பக்கத்தில் இருப்பதால கொஞ்சம் சிதைஞ்சிருந்தாலும், நல்ல பாதுக்காப்பா பராமரிக்கிறாங்கன்னுதான் சொல்லணும். இதுமாதிரி 7 கோவில்கள் இருந்ததாகவும் இது 6வது கோவில். 5வது கோவிலின் அடித்தளம் சுனாமியினால் வெளியே வந்திருப்பதாகவும் சொன்னாங்க....

கோவில் வரலாறு சொல்லும் தகவல் பலகை


மேலும் சில படங்கள்






தொடரும்

Wednesday, May 9, 2007

திருவாதவூர், திருமோகூர்

ம. ம. கோவில்கள் - 5 (நிறைவு பகுதி)

அழகர் கோவிலில் இருந்து கிளம்பி நாங்க போன அடுத்த கோவில் திருவாதவூர் கோவில். இந்த ஊரைப் பற்றி நீங்க கேள்விப்பட்டதுண்டா?

இது நம்ம மாணிக்கவாசகர் பிறந்த ஊர். அவருக்கு வாதவூரர்-ன்னு கூட ஒரு பேர் உண்டு. அவரு பிறந்து வளர்ந்ததெல்லாம் இந்த ஊரில்தான். பின்னர் அவர் மதுரை மன்னனிடம் அமைச்சராக இருந்தார். குதிரை வாங்க போனபோது, அந்த பணத்தையெல்லாம் திருப்பெருந்துறைக் கோவிலுக்கு செலவழித்தார். அரசர் கேட்டபோது குதிரை வாங்கியதாகச் சொன்னார், அவருக்காக இறைவன் நரிகளைப் பரியாக்கிய கதை நம்ம எல்லாருக்கும் தெரியும். திருவாசகத்தை அருளியதும் அவரே.

இன்னிக்கு திருவாசகமுன்னா எல்லாருக்கும் மாணிக்கவாசகரை விட இளையராஜா தான் ஞாபகத்துக்கு வராரு. அவரு கூட திருவாசகம் இசை வெளியிடுறதுக்கு முன்னாடி இந்த ஊர் கோவிலுக்கு வந்துட்டு போனாராம்.

இந்த ஊருக்கு வாதவூர்-ன்னு பேரு வரக்காரணம் நம்ம சனீஸ்வர பகவான். அவருக்கு ஒரு முறை வாத நோய் வந்ததாம். அப்போ அவர் இந்த ஊருக்கு வந்து இங்கிருக்கும் சிவபெருமானை பூஜை செய்து வழிபட்டாராம். உடனே அவருக்கு அந்த நோய் நீங்கியதாம். இப்பவும் கூட மக்கள் இந்த மாதிரி பிரச்சனைகளுக்காக இங்க வந்து போறாங்களாம். அதுமட்டுமில்லை இந்த ஊருக்கு வேதபுரின்னு அந்த காலத்தில ஒரு பேரு இருந்திருக்கு. வேத விற்பன்னர்கள் இங்கே அடிக்கடி கூடி விவாதங்கள் நடத்துவாங்களாம். அந்த வேதபுரி மருவி வாதபுரின்னு ஆகியிருக்கலாம், அதுவும் மருவி வாதவூருன்னு ஆகியிருக்கலாமுன்னு சொல்லுறாங்க.



கோவில் பழமையான கோவில்...நேரா சிவன் சன்னதிக்கு போனோம். நாங்க போன வேளை கரண்ட் இல்லை. சன்னதி ரொம்ப இருளடைஞ்சு இருந்தது. சிவன் விளக்கு வெளிச்சத்தில் பிரமாதமா இருந்தார். அவர் பேரு வேதபுரீஸ்வரர். அங்கிருந்து வெளியே அம்மன் சன்னதிக்கு போனோம். அம்மனை தரிசித்து விட்டு வரும்போது கரண்ட் வந்துருச்சு. அதுனால மறுபடியும் போய் வேதபுரீஸ்வரரை பார்த்து விட்டு வெளியே இருக்கும் சனீஸ்வரர் சன்னதிக்கு போனாம். அன்னிக்கு சனிக்கிழமை. அதுனால அவருக்கு சிறப்பு அலங்காரம் செஞ்சிருந்தாங்க. அவரையும் தரிசனம் பண்ணிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். நான் இந்த கோவில் படம் எதுவும் எடுக்கலை. இணையத்தில் கிடைச்ச சில படங்களை போட்டிருக்கேன்.


மாணிக்க வாசகர் பிறந்த இடத்தில் ஒரு சிறிய கோவில் கட்டியிருந்தாங்க. நாங்க போனபோது அது பூட்டி இருந்த்து. மாலை 6 மணிக்குதான் திறப்பாங்களாம். சரி அடுத்தமுறை பார்த்துக்கலாம்ன்னு அங்கிருந்து புறப்பட்டோம்.


மதுரை திரும்பும் வழியில் திருமோகூர் கோவிலுக்கு போனாம். நாங்க போனபோது தெப்ப திருவிழா நடக்க இருந்தது. அதுனால மக்கள் வெள்ளம் நிரம்பியிருந்தது.உள்ளே நுழையும் இடத்தில் உற்சவர் இருந்தார். அவர் பெயர் திருமோகூர் ஆப்தன். அவரை தரிசித்துவிட்டு மூலவரை பார்க்கப் போனோம். மூலவர் காளமேகப் பெருமாள், நின்ற கோலம். இது 108 திருப்பதிகளில் ஒன்று. திருமங்கை ஆழ்வார் மற்றும் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. தாயார் மோகனவல்லி.


தாயார் சன்னதிக்கு அருகில் சக்கரத்தாழ்வார், சக்கரத்தாழ்வாருக்கு 16 கைகள், அதில் 16 விதமான ஆயுதங்களைக் கொண்டு ஜம்முன்னு இருக்கார். திருமோகூர் சக்கரத்தாழ்வார் ரொம்ப பிரசித்தி பெற்றவர். அவர் இருக்கும் இடத்தில் செல்வம் குவியும் என்பது ஐதீகம். 200 ரூபாய்க்கு சுதர்சன ஹோமத்தில் வைத்து பூஜிக்கப் பட்ட யந்திரம் கிடைக்கிறது.


திருமோகூரில் இருந்து மதுரை வந்து அடுத்தநாள் கிளம்பி சென்னை வந்து சேர்ந்தோம்.

ஏதா எனக்கு தெரிந்த விதத்தில் நான் பார்த்த கோவில்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் கண்டிப்பாக இந்த கோவில்களுக்கு செல்லுங்கள், உங்கள் கருத்துக்களையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தொடர்ந்து படித்த அனைவருக்கும், ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

Wednesday, April 25, 2007

அழகர் மலை அழகர்கள்


ம. ம. கோ 4ம் பகுதி

ஆமாங்க அழகர் மலை அடிவாரத்தில் கள்ளழகர் இருக்காரு. மலையில் நம்ம அழகர் முருகன் இருக்காரு. இந்த ரெண்டு அழகர்களும் இருப்பதாலதான் அந்த மலைக்கு அழகர்கள் மலைன்னு பேரு வெச்சிருக்கலாமோ?

முதலில் போனது கள்ளழகரைக் காண. ஆமாம், அழகர் மலை அடிவாரத்தில், இருக்கும் அழகர் கோவிலுக்கு போனோம்.

அழகர் கோவில் என்பதே அழகு தமிழ் என்றாலும், அதை விட இனிமையான இன்னோரு பேர். இந்த இடத்துக்கு இருக்காம். திருமாலிருஞ்சோலை. நல்லா இருக்குல்ல


கோவில் ரொம்ப அருமையான இடத்தில் இருக்கு. அழகர் மலை பச்சைப் பசேலுன்னு அழகாவே இருக்கு. அதன் அடிவாரத்தில் கோவில் இருக்கு.



வண்டியை வெளியிலே நிறுத்திட்டு கோட்டை சுவர் வழியா கோவிலுக்கு போனோம். அப்போ மணி சுமார் காலை 11:30. உள்ளே நுழையும் கோட்டை வாசலில் இருந்த பிரமாண்டமான கருடரையும், அனுமனையும் பார்த்தேன். அந்த கோட்டை சுவரையும் சுற்றி இருக்கும் மலையழகையும் பார்த்து ரசிச்சிட்டே போலாமுன்னு நினைச்சேன். ஆனால் அந்த கல்தரையில் காலை வச்சதும் வெயிலால சரியான சூடு. ஒரே ஓட்டமா கோவில் முகப்பு மண்டபத்துக்கு ஓட வேண்டியதாப் போச்சு.

அந்த முகப்பு மண்டபம் முழுக்க மக்கள் இளைப்பாறிட்டு இருந்தாங்க.. பக்கத்திலேயே நம்ம முன்னோர்களும் நிறையவே இருந்தாங்க. சொல்லப்போனா, மக்களோட இரண்டறக் கலந்திருந்தாங்க. அதைத் தாண்டி உள்ளே போனால் ஒரே கும்மிருட்டா இருந்தது. கருங்கல் கட்டிடம், நாங்க வேற நல்ல வெயில்ல இருந்து உள்ள போறோமா, அதுனால கண்ணு தெளிவா தெரியவே கொஞ்ச நேரம் ஆச்சு. அந்த முதல் பிரகாரத்தில் நிறைய அழகான சிற்பங்கள் இருந்தது. ஆனா, வெளிச்சம் இல்லாததுனால எல்லாத்தையும் சரியா ரசிக்க முடியலை.

சரி மூலவரை பார்க்கலாமுன்னு படியேறி அடுத்த பிரகாரத்துக்கு போனா, அங்க உற்சவர் கம்பீரமா இருந்தார். மூலவருக்கு முன்னால பெரிய திரை கட்டி இருந்தாங்க.. என்னான்னு கேட்டா மூலவருக்கு தைல காப்பு சாத்தியிருக்காங்களாம். ஒருமாசத்துக்கு மூலவர் தரிசனம் கிடையாதாம். வருஷத்தில ரெண்டு தடவை இந்த மாதிரி தைல காப்பு சாத்தி திரை போடப்படுமாம். சரீ நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு நினைச்சுகிட்டு உற்சவரை தரிசனம் பண்ணிகிட்டோம். மூலவர் பேரு சொல்லலையே, அவர் சுந்தரராஜப் பெருமாள். அவருக்கு இன்னோரு பேரும் இருக்கு. பரமஸ்வாமி. ஆச்சரியமாயிருக்கில்ல? சாதாரணமா, பரமன், பரமஸ்வாமின்னா, சிவனைத்தான் குறிக்கும். இங்க பெருமாளுக்கு அந்தப் பேரு. அரியும் சிவனும் ஒண்ணுன்னு நினைச்சிட்டே வெளியிலே வந்தோம். அங்க ஒரு விநாயகர் சிலை இருந்தது. பெருமாள் கோவிலில் விநாயகர் சிலையை பல இடங்களில் பார்த்திருக்கோம். ஆனா புதுசா பார்த்தது, விநாயகரோட பேருதான். என்ன பேரு தெரியுமா? தும்பிக்கையாழ்வார் :)

வெளிப்பிரகாரதிலே, தாயார் சன்னதி இருக்கு. தாயார் பேரு பூமிப் பிராட்டியார். பிரகாரம் சுத்தி வந்தா, ஆண்டாள் சன்னதி இருக்கு. ஆண்டாள் பெரியாழ்வாரோட இந்த கோவிலுக்கு வந்திருக்காங்களாம். கேட்டவுடனே ரொம்ப மலைப்பா இருந்தது. கோவிலோட தொன்மை புரிஞ்சது. அங்க யோக நரசிம்மருக்கு கூட ஒரு சன்னதி இருக்கு.

வெளியில பிரசாத ஸ்டால் இருக்கு. எல்லாருக்கும் ரொம்ப பசிச்சதுனால வடை வாங்கினேன். எல்லாருக்கும் குடுத்துட்டு நான் சாப்பிட எடுத்தபோது, என் வடையை யாரோ பிடுங்கிட்டாங்க.. ஒரு நிமிஷம் ஒண்ணும் புரியலை. அப்புறம் பார்த்தா, எல்லாருக்கும் குடுத்த நான், நம்ம முன்னோரை மறந்துட்டேன். அவங்கள்ல ஒருத்தர் தான் வடையை எடுத்துட்டு போனது. சரின்னு இன்னொரு வடை வாங்கினேன். அதை பேப்பரில் மறைச்சு எடுத்துட்டு வண்டியில ஏறினதுக்கப்புறம் சாப்பிட்டேன்.

அங்கிருந்து மேலே பழமுதிர்சோலைக்கு போனாம். மலையில் 3கி.மீ. பயணம். போகும்போது கல்லூரி காலத்தில் நண்பர்களோடு வந்ததை சொல்லிக்கொண்டே வந்தேன். நான் முதன்முதலில் மேடையேறி பாடிய இடம் பழமுதிர்சோலை. அதைப் பற்றி பேசிக் கொண்டே மேலே சென்றோம்.


முருகனின் ஆறு படைவீடுகளில் பழமுதிர்சோலை எனக்கு ரொம்ப பிடித்த கோவில். முன்னாடி ஒரு குட்டி மண்டபம் மட்டும் இருந்தது. இப்போ முகப்பில் ஒரு சிறிய கோபுரம் இருந்தது. மண்டபத்திலும் கூட தரை வேலைப்பாடுகள் செய்து பளிச்சுன்னு இருந்தது. அதுனால இன்னும் பிடிச்சுப்போச்சு. அமைதியான சூழலில் அமர்ந்திருந்த அழகனை தரிசனம் செய்துவிட்டு, நூபுர கங்கைக்கு போனாம்.

சுமார் 30 படிகள் ஏறவேண்டும். படிகளின் ரெண்டு பக்கமும் முன்னோர்கள் கூட்டம்தான். ஏறிப்போனால் மலைக்கு நடுவில் எப்போதும் வற்றாத நூபுர கங்கையைக் காணலாம். மலைகளின் மூலிகைகள் வழியாக வரும் நீர் என்பதால் இதுக்கு மருத்துவ குணமும் இருக்குதுன்னு சொல்றாங்க. அங்கேயே ராக்காயி அம்மன் சன்னதி இருக்கும். ரொம்ப அழகான அம்மன்.

பக்கத்திலேயே, அரசு மூலிகை வனம் இருந்தது. அங்க பலவிதமான வியாதிகளின் நிவாரணத்துக்கான மரங்கள் வளர்க்கப்படுதாம். அங்கே வேணுமின்னா நம்ம மரக் கன்றுகளை வாங்கிக்கலாம். எனக்கும் ஆசைதான் ஆனா, வீட்டில் இடம் இல்லையே...... அந்த அமைதியான சூழலை கொஞ்ச நேரம் ரசிச்சிட்டு அங்கிருந்து புறப்பட்டாச்சு.

தொடரும்.....

Tuesday, April 17, 2007

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் - ம.ம.கோவில்கள் -3

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் - அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டமுன்னு பாட்டு இருக்கு.


ஆமாம் நான் போனபோது நிஜமாகவே குமரனுக்கு கொண்டாட்டம் தான். அன்று திருத்தேர்.


கூட்டம் ஜாஸ்தியா இருக்குமேன்னு பயந்துகிட்டே போனோம். ஆனால் அப்புறம்தான் தெரிஞ்சது, தேர் காலையிலே. நான் போனது மாலை.
தேர் நல்லபடியா நிலை சேர்ந்திருந்தது. தேர் ரொம்ப் புதுசா இருந்தது. புது தேரான்னு தெரியலை. நீங்களே பார்த்து சொல்லுங்க. தேரில் ராஜா மாதிரி கம்பீரமா வீற்றிருந்த குமரனை காண கண்கோடி வேண்டும்.


கோவில் ஒரு குடைவரைக் கோவில். அந்த பெரிய குன்றை குடைஞ்சு கட்டீருக்காங்க..கோவில் பல நிலைகளா இருக்கு. கோவில் உள்ள நுழைஞ்சதும் வழக்கம் போல கடைகள் அப்புறம் விநாயகர் காளி சிலைகள் இருக்கு. அதைத் தாண்டி அடுத்த நிலைக்கு போனா.. அது பார்க்கிங் ஏரியா (parking area). ஆமாம் அங்க கல்லிலே செதுக்கப்பட்ட நந்தி, மயில், மூஞ்சூறு மூன்றும் ஒரே இடத்தில் இருக்கு.

இது வேறு எந்த முருகன் கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பம்சம். முருகனோட வாகனம் மயில் இருக்கு. விநாயகரோட வாகனம் மூஞ்சூறும், சிவனோட வாகனம் நந்தியும் இருக்கு. முருகனோட கல்யாணத்துக்கு இவங்க ரெண்டு பேரும் தங்களோட வாகனங்களில் வந்திருக்காங்க.. உள்ளே இவங்களுக்கு தனி சன்னதி இருக்கு. தங்களோட வாகனங்களை பார்க்கிங் ஏரியாவிலே நிறுத்தி வெச்சிருக்காங்க...

அதே இடதில் உக்கிரமூர்த்தி சிலை இருக்கு. தவறாம பாருங்க.. பேருதான் உக்கிரர், ஆனால் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. அதைப் பார்த்துகிட்டே ரொம்ப நேரம் நின்னுட்டிருந்தேன். என்ன அழகா குன்றிலேயே செதுக்கி இருக்காங்க... அழகு அழகு கொள்ளையழகு

அதைக் கடந்து அடுத்த நிலைக்கு போனா அர்த்த மண்டபம் இருக்கு. அங்கிருந்து சில படிகளைக் கடந்தால் சுவாமி சன்னதிகள் இருக்கு. இடப்புறம், சத்தியகிரீஸ்வரர் லிங்கோத்பவரா இருக்கார். பிரம்மாவுக்கும் சன்னதி இருக்கு ஆனா சரியா பார்க்க முடியலை, மறைஞ்சு இருக்கு. நேராக மூன்று சன்னதிகள் இருக்கு. கற்பக விநாயகர், அம்மன், முருகன். முருகனோட தேவயானை, நாரதர், அகத்தியர், சூரிய, சந்திரர்கள் இருக்காங்க. முருகன் பெரிய வேல் வெச்சிருக்கார். இங்க அபிஷேகமெல்லாம் வேலுக்கு தானாம். இந்த மூணு சன்னதிகளிலும் குன்றிலேயே தெய்வ உருவங்களை செதுக்கியிருக்காங்க. ஒன்னொன்ணும் அவ்வளவு அழகு.

சன்னதிகளை விட்டு வெளியே வந்தால் கீழே இறங்க தனி வழி. அந்த வழியே இறங்கும்போது மேலும் பல சன்னதிகள் இருக்கு. குறிப்பா சனீஸ்வரருக்கு தனி சன்னதி இருக்கு.

கோவிலை விட்டு வெளியே வந்தால் கடைவீதியில் நிறைய கடைகள் இருக்கு. குறிப்பா எதை எடுத்தாலும் 20 ரூபாய்ன்னு போட்டு நிறைய கடைகள் இருக்கு. நேரமில்லாததினால் அங்க எல்லாம் போகலை.

குன்றுக்கு மேல் ஒரு கோவில் இருக்காம். ஆனால் ஆறு மணிக்கு மேலே ஆனதுனால எங்களை மேலே ஏற அனுமதிக்கலை.

அடுத்த பகுதிகளில் கள்ளழகர், பழமுதிர்ச்சோலை, திருவாதவூர், திருமோகூர் கோவில்களைப் பற்றி சொல்லுறேன்.

தொடரும்.........


முதல் பகுதி இங்க இருக்கு. இரண்டாவது இங்க இருக்கு.