Showing posts with label சொந்த கதை. Show all posts
Showing posts with label சொந்த கதை. Show all posts

Wednesday, August 27, 2008

கொடநாடு காட்சிமுனை....

ஊட்டி மலைச் சாரலிலே...4

ஆணி கொஞ்சம் அதிகமா போனதுனால அடுத்த பகுதி உடனே எழுதமுடியலை. அதுக்குள்ள கோடிக்கணக்கான தனிமடல் வந்திருச்சு. (சரி... சரி.....)

நீலகிரி எக்ஸ்பிரஸில் வந்த முதல் பகுதி இங்கே....
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வந்த இரண்டாம் பகுதி இங்கே
தொட்டபெட்டா ரோட்டுமேல இங்கே.... இது வரைக்கும் படிக்கலைன்னா உடனே படிச்சிடுங்க..

கொடநாடு, கோத்தகிரியிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் இருக்கு. போற வழி சுமாராதான் இருந்துச்சு. ஆனா வழியெங்கும் பச்சைப் பசேலுன்னு டீ எஸ்டேட்களும், தோட்டங்களும் இருந்தது. நாங்க போகும் போது நல்ல மேகமூட்டமா வேற இருந்துச்சா... பார்ககவே அமர்க்களமா இருந்துச்சு.. வண்டியை நிறுத்தி நிறுத்தி நல்லா பார்த்து ரசிச்சுகிட்டே போனோம். போகும் வழியில் இருந்த ஒரு அழகான கிராமம் கீழே.



கொடநாடு எல்லையிலேயே "அந்த" எஸ்டேட் இருக்கு. சும்மா சொல்லக் கூடாது நாங்க பார்த்ததிலேயே அருமையா பராமரிச்சு பார்க்கவே அழகா இருந்தது அந்த எஸ்டேட் தான். மொத்தம் 9 கேட். கேட் 4 கிட்டதான் பங்களா இருக்கு. நாங்க போன சமயத்தில "அவங்க" அங்கதான் இருந்தாங்க. அதுனால போலீஸ் பாதுகாப்பு இருந்துச்சு. பங்களா தாண்டி சுமார் 2 கி.மீ தொலைவிலே இந்த காட்சி முனை இருக்கு.

நாங்க போனபோது எங்களைத் தவிர இன்னும் இரண்டு பேர் மட்டும்தான் அங்க இருந்தாங்க.. இப்படி ஒரு சுற்றுலா தலத்தில் ஆளே இல்லாமல் இருந்ததுனால இங்க எதுவுமே இருக்காது போல இருக்கே. தேவையில்லமா வந்துட்டோமோன்னு நினைச்சேன். காட்சிமுனை கோபுரத்தின் மேலே ஏறிப்பார்த்தபோதுதான நான் நினைச்சது எவ்வளவு தப்புன்னு தெரிஞ்சது.

என்ன அருமையான காட்சி. என் வாழ்நாளில் நான் பார்த்த மிகச் சிறந்த இடங்களில் இதுவும் ஒண்ணு. அதை விவரிக்க வார்த்தைகள் போதாதுங்க. சுத்தி வர மலைகள். நடுவில் பசுமை பள்ளத்தாக்கு. அந்த அழகே அழகு. அந்த பள்ளத்தாக்கின் முடிவில் ஒரு கிராமம். (தெங்குமராடா).. அருகே பாயும் மோயார் நதி. அந்த நதி அப்படியே சென்று பவானியில் கலக்குது. அப்பர் பவானி அணையின் அழகும் தெரியுது. ஆஹா என்ன அருமை. என்னைக் கேட்டால் உலகத்திலேயே வாழ அழகான இடம் அந்த தெங்குமராடா கிராமமுன்னு தான் சொல்லுவேன். என்ன அருமையான சூழல். காட்சிமுனை கோபுரத்தில் இருந்து பார்த்தால்தான் இந்த இடம் எவ்வளவு உயரத்தில் இருக்குன்னு தெரியுது. பக்கத்திலேயே ரங்கசாமி சிகரம் இருக்கு. அதைவிட உயரத்தில் இருக்கு இந்த இடம். உண்மையிலேயே காலடியில் மேகங்கள் தவழுது. பறவைப் பார்வைன்னு சொல்லுவாங்களே. அதை இங்க சூப்பரா அனுபவிக்கலாம்.

அழகான பசுமை பள்ளத்தாக்கு, அதில் ஓடும் நதிகள், அங்கே ஒரு அழகிய கிராமம், அணைக்கட்டு, சுற்றிலும் சூரியனின் வெள்ளி பூச்சு பூசியதுபோல சூரிய ஒளியில் குளிக்கும் மலைகள், ஆஹா வர்ணிக்க எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை.

சொல்ல மறந்துட்டேனே...இந்த அழகான தெங்குமராடா கிராமத்தில் தான் அன்னக்கிளி படத்தில் மச்சானைத் தேடும் பாடலை படமாக்கினாங்களாம். இந்த சரித்திரக் குறிப்பை எனக்கு சொன்னது டிரைவர் சரவணன்.

கீழே படத்தில் இருப்பதுதான் ரங்கசாமி சிகரம்.

கீழே படத்தில் கீகீகீழே.... தெரிவதுதான் தெங்கமராடா அருகில் மோயார் நதி


ரங்கசாமி சிகரமும் பவானி அணையின் ஒரு பகுதியும் கீழே



தெங்கமராடா கிராமத்திற்கு இந்த காட்சி முனையிலிருந்து இறங்கி ட்ரெக்கிங் செல்லலாமாம். ஆனால் அதுக்கு வனத்துறை அனுமதி பெற வேண்டுமாம். இந்த இடத்தில் சூரிய உதயமும் அஸ்தமனமும் அருமையாக இருக்கும் என்று சரவணன் சொன்னார்.


காட்சி கோபுரத்தின் கீழே ஒரே ஒரு கடை இருக்கிறது. அதற்கு பக்கத்தில் ஒரு இருவது படிகள் கீழிறங்கி செல்லலாம். போனால் இதே அழகை அங்கிருந்தும் ரசிக்கலாம். நாங்க இதை பார்த்து ரசித்துக் கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியலை. ரொம்ப நேரம் அங்கேயே இருந்தோம். ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள், பொதுவாக இங்கே வருவதில்லைன்னு சரவணன் சொன்னாரு. நீங்க ஊட்டி போனீங்கன்னா இந்த இடத்துக்கு கண்டிப்பா போங்க... தவறவிடாதீங்க...

ஒருவழியா மனசே இல்லாம அங்கிருந்து கிளமபி.. கோத்தகிரி வழியாவே ஊட்டி வந்தோம். சரவணன் அடுத்து எங்களை அழைத்து போன இடம் டீத்தூள் தயாரிக்கும் தொழிற்சாலை. பறித்த தேயிலைகளில் இருந்து டீ எப்படி தயாராகுதுன்னு காமிச்சாங்க. நல்லா இருந்தது. கூடவே குடிக்க டீயும் குடுத்தாங்க... ஊட்டி டீன்னா ஊட்டி டீதான். சூப்ப்ரா இருந்துச்சு. அங்கயே டீத்தூள் எல்லாருக்கும் வாங்கிகிட்டோம். ஊட்டியில பல இடங்களில் டீத்தூள் வித்தாலும் தரமான டீத்தூள் வாங்கணுமுன்னா நீங்க இங்கதான் (The nilgiri tea factory)போகணும். அங்க புதுசா வெள்ளை டீ ஒண்ணு இருந்துச்சு. அது குடிச்சா அவ்வளவு நல்லதாம், பல வியாதிகள் குணமாமுமாம். விலை ரொம்ப அதிகம். நான் பச்சை டீ தான் கேள்விப்பட்டிருக்கேன். வெள்ளை டீ இங்கதான் பார்த்தேன். இன்னொன்னு, இங்க கிடைக்கிற நீலகிரி தைலமும் நல்ல தரமானதா இருக்கு. Home made chocolates கூட நல்லா இருக்கு.

அங்கிருந்து நேரா நாங்க போனது, பொட்டானிக்கல் கார்டன் ஆனா எல்லாரும் அசதியா இருந்ததுனால இன்னொருநாள் போயிக்கலாமுன்னு உள்ளேயே போகாம திரும்பிட்டோம். அங்கிருந்து நேரா பையன் ரொம்ப ஆசைப் பட்டதுனால போட்டிங் போனோம். அங்க விளையாட்டுகள் நிறைய இருக்கு. ஆனா நாங்க படகுல மட்டும் போயிட்டு, அங்கிருந்த மினி ரயிலிலும் போயிட்டு திரும்பிட்டோம்.

6:30 மணிக்கெல்லாம் நல்லா இருட்டி போச்சு. நேரா தங்கிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தோம். நல்ல குளிரு வேற.ரூமில தரையில கால வைக்க முடியலை. என்னதான் heater போட்டாலும் வேலைக்காகலை. இருந்த கம்பளியை எடுத்து நல்லா போத்திகிட்டு பெட்டு மேலயே உட்கார்ந்திருந்தேன். 8 மணிக்கு இரவு உணவு தயாராகிடுச்சுன்னு விக்ரம் வந்து சொன்னாரு. குளிருக்கு இதமா சுடச் சுட அருமையான உணவு ரெடியா இருந்துச்சு. சாப்பாட்டுக்கு அப்புறம் என்ன சுகமான தூக்கம்தானே. நாள் முழுவதும் சுத்தினதுதான தூக்கம் சொக்கிடுச்சு. கொஞ்ச நேரம் டி.வி பாத்திட்டு தூங்கியாச்சு.

(தொடரும்................)

Thursday, August 7, 2008

தொட்டபெட்டா ரோட்டு மேல...

வாங்க வாங்க.....இது ஊ.ம.சா-3.

நீலகிரி எக்ஸ்பிரஸில் வந்த முதல் பகுதி இங்கே....

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வந்த இரண்டாம் பகுதி இங்கே

சரவணன் சொன்ன நேரத்துக்கு வந்துட்டாரு... காலை உணவு சாப்பிட்டு தொட்டபெட்டாக்கு வண்டியிலே கிளம்பியாச்சு. போற வழியிலெல்லாம் இருக்கும் இடங்கள் பற்றி சரவணன் சொல்லிக்கிட்டே வந்தாரு... எங்கே பார்த்தாலும் பச்சைப் பசேலுன்னு இருந்துச்சு, பாக்க பாக்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்துச்சு.

கோத்தகிரி ரோட்டுல போயி, தொட்டபெட்டாக்கு திரும்பும் இடத்திலிருந்து மேலே போக போக ரோடு ரொம்ப மோசமா இருந்துச்சு. வண்டிக்கு கட்டணம் வசூலிக்கிறாங்க.. ஆனா ரோட்டை பராமரிக்கவே இல்லை. என்ன இது எவ்வளவு சுற்றுலா பயணிங்க வராங்க... ரோடு நல்லா போடலாமில்லைன்னு சொன்னா, நம்ப சரவணன் சொன்னாரு, இந்த ரோடு 2 மாசத்துக்கு முன்னாடி போட்டது தானாம். என்னத்த சொல்றது..............என்ன கொடுமை சரவணன் இது?????????

ஒருவழியா வண்டி நிப்பாட்டும் இடத்துக்கு வந்து சேந்தாச்சு. ஆனா என்னாடா சிகரமுன்னு சொன்னாங்க... இங்க எதையும் காணோமேன்னு பார்த்தா...இதுக்கு மேல நடந்து போகணுமுன்னு சொன்னாங்க... கரடு முரடா இருந்த சின்னப் பாதையில ஏறினோம்... நம்ம வாண்டையும் தூக்கிக் கிட்டு, நம்ம உடம்பையும் தூக்கிகிட்டு ஏறுறதுக்குள்ள நாக்கு தள்ளிப் போச்சு.

மேல போனா அங்க நுழைவுச்சீட்டு வாங்கணுமுன்னு சொன்னாங்க...அதையும் வாங்கிட்டு... போனா ஊட்டியோட குளிரு என்னான்னு அங்கதான் நல்லா தெரிஞ்சது. ஆட்டிருச்சு ஆட்டி. தங்கமணி முன்னேற்பாடா sweater (இதுக்கு தமிழில் என்ன??....) எடுத்துட்டு வந்திருந்தாங்க.. நான் ரொம்ப பந்தாவா, ஜூலை மாசத்தில ஊட்டியில குளிராதுன்னு சொல்லி எதுவும் எடுத்துட்டு வரலை. ஊட்டிக்கு வந்தபோது கூட அவ்வளவு குளிராயில்லை... ஆனா தொட்டபெட்டாவுல குளிர் ஆட்டிருச்சு.. தங்கமணி நக்கலா என்னைப் பாத்தாங்க.."ஒழுங்கா sweater எடுத்துட்டு வந்திருக்கலாமுல்ல"ன்னு சொன்னாங்க. ஆனா நம்ம யாரு... குளிராத மாதிரியே... "இதெல்லாம் ஒரு குளிரா" எனக்கு ஒண்ணும் குளிரலைன்னு சொன்னா...."இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை"ன்னு பதில் வருது. எதுக்கு குறைச்சலில்லை?????

தொட்டபெட்டா சிகரத்தில பார்த்தா அருமையான இயற்கை காட்சிகள் எல்லாம் காணக்கிடைக்குது. ஒரு காட்சி முனை (view point) கட்டடம் இருக்கு. அது மேல ஏறினா அங்க தொலைநோக்கியை வச்சு ஊட்டி ரேஸ் கோர்ஸ் காமிச்சாங்க.. நானும் பார்த்தேன்.. என்னக்கு என்னமோ பச்சையா தெரிஞ்சது...(no....அந்தப் பச்சையில்லை. நான் சொன்னது Green அந்தப் பச்சை. தமிழில் எல்லா வார்த்தைக்கும் இன்னோரு அர்த்தம் இருக்குடா சாமி)

சிகரத்தின் மேலேயே ரொம்ப நேரம் இருந்தோம்.. சின்னப் பூங்கா ஒண்ணு இருந்தது... நல்லா பராமரிச்சு வச்சிருந்தாங்க... அங்கேயே ரொம்ப நேரம் உட்கார்ந்து ரசிச்சிட்டு இருந்தோம்.

அப்போ நம்ம சரவணன் இந்த இடம் திருடா திருடா படத்தில் வரும் என்ற சரித்திரக் குறிப்பு சொன்னாரு. இந்த மாதிரி நிறைய சரித்திரக் குறிப்புகள் சொன்னாரு.. அதையெல்லாம் உங்களுக்கு சொல்லுவது என்னோட கடமை.

சரி தொட்ட பெட்டா வந்துட்டோமே... முட்டை பரோட்டா சாப்பிடலாமான்னு பார்த்தா... அது கிடைக்கலை. ஆனா சுட சுட மிளகாய் பஜ்ஜி இருந்துச்சு. அதை விடலாமா... ஒரு கை பாத்தாச்சு... குளிரில் சூடான பஜ்ஜி சூப்பரா இருந்துச்சு.

இங்கயே இருந்தா நேரமாகிடும் அடுத்து கோத்தகிரி வழியா கொடநாடு போகலாமுன்னு கிளம்பி, மறுபடி அதே வண்டி நிறுத்தும் இடத்துக்கு சின்னப் பாதை வழியா இறங்கி வந்தோம். அந்த பாதை முழுவதும் சின்ன சின்ன கடைகள். தொப்பி, கண்ணாடி, சூடான கடலை, கேரட் எல்லாம் இருந்தது. கேரட் அப்போத்தான் பறிச்சா மாதிரி பாக்குறதுக்கு சூப்பரா இருந்தது.

ஒருவழியா வண்டிக்கு வந்து ஏறி கொடநாடுக்கு கிளம்பியாச்சு..... அடுத்த பகுதியில போயிடலாம்....................



(தொடரும்...)

Wednesday, January 23, 2008

மனம் விரும்புதே


நீங்க "நேருக்கு நேர்" படத்திலிருந்து "மனம் விரும்புதே" பாட்டு கேட்டிருப்பீங்க.. எனக்கும் அது வெளி வந்த காலத்தில் ரொம்ப பிடிச்ச பாட்டு. ரொம்ப நாளுக்கு பிறகு அந்த பாடலை நேற்று கேட்டேன். எனக்கு என் நண்பன் ரவியின் நினைவுதான் வந்தது.
ரவி என்னோட திருச்சியில் படித்தான். எங்க காலேஜ் திருச்சியில் இருந்தது. என் வீடு இருந்தது ஸ்ரீரங்கம். ( பாத்தீங்களா.... நானும் நம்ம சுஜாதா மாதிரிதான். அதுக்காக இதை நீங்க ஸ்ரீரங்கத்து தேவதைகளோட ஒப்பிட வேணாம். )
ரவி வீடும் என் வீடும் ஒரே தெருவில் தான் இருந்தது. நாங்க கல்லூரியிலும் சேர்ந்துதான் படிச்சோம். ரெண்டு பேரும் ஒன்னாதான் காலேஜுக்கு போய்வருவோம். இதனாலேயே நாங்க ரொம்ப நெருங்கிய நண்பர்களாயிட்டோம். ரவி ரொம்ப அப்பாவி. நான் என்ன சொன்னாலும் நம்பிடுவான். ஏன்னு தெரியலை, ஆனா நான் பொய்யே சொல்லமாட்டேன்னு என் மேல் அவனுக்கு அபார நம்பிக்கை. அது உண்மைதான். (சரி சரி ... சிரிக்க வேணாம்............) ஆனா எனக்கு அவனிடம் சின்ன சின்ன பொய் சொல்லி விளையாடறது ரொம்ப பிடிக்கும்.
அது நேருக்கு நேர் வெளிவந்த காலகட்டம். மனம் விரும்புதே உன்னை பாடல், பாட்டுக்காகவும்
சிம்ரனுக்காகவும் சக்கை போடு போட்டுகொண்டிருந்தது. ரவிக்கும் இந்த பாடல் பிடிக்கும். ஒரு நாள் நாங்க காலேஜ் போயிட்டிருக்கும்போது பஸ்ஸில் இந்த பாடல் ஒலித்தது. அப்போ நான் ரவி கிட்ட "ரவி இந்த பாட்டு நான் எழுதினது தான்" னு சொன்னேன். சென்னையில் இருக்கும் என் மாமா தேவாவின் நண்பர். என் மாமா நான் எழுதின கவிதையெல்லாம் தேவா கிட்ட காட்டியிருக்காரு. அது அவருக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. உடனே எனக்கு என் மாமா எனக்கு போன் செய்தார். போனிலேயே நான் இந்த பாடலை சொல்ல தேவா அதை இந்த படத்தில் உபயோகிச்சிருக்காரு-ன்னு சொன்னேன். அவனும் அதை ரொம்ப நாள் நம்பிட்டு இருந்தான்.
கொஞ்ச நாளுக்கு பிறகு என் சென்னை மாமா எங்க வீட்டுக்கு வந்திருந்தார். அப்போ ரவியும் எங்க வீட்டுக்கு வந்தான். எங்க வீட்டில் எல்லாருக்கும் ரவியை தெரியும் என்பதால், என் மாமாவும் ரவியும் பேசிகிட்டு இருந்தாங்க. அப்போதான் என் குட்டு உடைஞ்சது. ஆனாலும் ரவி என்னை எதுவுமே கேட்கவில்லை. அதன் பின் நானே அவனிடம் மன்னிப்பு கேட்டேன். அவன் "விளையாட்டுக்குத்தானேடா நீ அப்படி சொன்ன. அதுக்கு எதுக்கு மன்னிப்பு" ன்னு சொன்னான்.
எனக்கு இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் ரவி நினைவுதான் வரும்.
எனக்கு கிடைத்த மிகச் சிறந்த நண்பர்களில் ரவியும் ஒருவன்.
குறிப்பு : எனக்கு "மனம் விரும்புதே உன்னை" பாட்டின் மூலமான "மனவியாலகிம் " என்ற தியாகராஜருடைய கீர்த்தனை ரொம்ப பிடிக்கும்.